141. தலைவி கூறல்
அஃதாவது, ஆன்ம சிற்சத்தியாகிய தலைவி தனக்கும் பரம்பொருட்கும் உள்ள தொடர்பால் அஃது தனக்கு அருள் வழங்க வந்தருளும் காலக் குறிப்பை உணர்ந்து பல்வேறு சத்திகளாகிய தோழிகட்கு உரைப்பதாம். தான் பெற இருக்கும் திருவருள் போகம் மனம் வாக்குகட்கு எட்டாத ஒன்று என்பது பற்றி உலகியற் போக நுகர்ச்சி வாய்பாட்டால் எடுத்துரைக்கின்றாள்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 5704. தந்தேகம் எனக்களித்தார் தம்அருளும் பொருளும்
தன்மையும்இங் கெனக்களித்தார் எம்மையினும் பிரியார்
எந்தேகம் அதிற்புகுந்தார் என்உளத்தே இருந்தார்
என்உயிரில் கலந்தநடத் திறையவர்கா லையிலே
வந்தேஇங் கமர்ந்தருள்வார் ஆதலினால் விரைந்தே
மாளிகையை அலங்கரித்து வைத்திடுதி இதற்குச்
சந்தேகம் இல்லைஎன்றன் தனித்தலைவர் வார்த்தை
சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
உரை: மாதே! தம்முடைய பொன் வண்ண மேனியையும் தம்முடைய திருவருளையும் பொருளையும் தம்மையும் எனக்கு அளித்தவரும், எக்காலத்தும் என்னைப் பிரியாதவரும், என்னுடைய தேகத்துக்குள் புகுந்து என்னுடைய உள்ளத்தில் எழுந்தருள்பவரும், என்னுடைய உயிரில் கலந்து செய்யும் நடனத்தை உடையவரும் ஆகிய இறைவரான சிவபெருமான், காலைப்பொழுதில் இங்கே வந்து எம்மோடு இருந்து அருளுவாராதலால், தோழி, நமது மாளிகையை விரைந்து அலங்காரம் செய்து வைப்பாயாக; அவர் வருதற்கு சந்தேகமில்லை; அவர் என்னுடைய ஒப்பற்ற தலைவராதலால் அவருடைய வார்த்தை முக்காலும் உண்மையாம் என அறிக. எ.று.
சிவபெருமானுடைய திருமேனி பொன் வண்ணமுடையதாதலால் தான்பெற்ற பொன்னுருவத்தை, “தம் தேகம் எமக்களித்தார்” என்றும், தம்முடைய திருவருள் இன்பத்தைத் தனக்கு அளித்தமை விளங்க, “தம்மையும் இங்கு எமக்களித்தார்” என்றும் தலைவி உரைக்கின்றாள். அன்பர்களின் உயிரில் கலந்து உள்ளத்தில் எழுந்தருளுவது இறைவனாகிய சிவனுக்கு இயல்பாதலால், “எம் தேகமதில் புகுந்தார் என்னுளத்தே இருந்தார்” என இயம்புகின்றாள். உயிரிற் கலந்த பொழுதும் அவர் தமது திருநடனத்தைப் புரிந்த வண்ணமிருக்கின்றார் என்பாளாய், “என்னுயிரிற் கலந்த நடத்து இறைவர்” என்று மொழிகின்றாள். காலைப் பொழுது சுருங்கிய எல்லையை உடையதாகையால், “விரைந்து மாளிகையை அலங்கரித்து வைத்திடுதி” என்று கூறுகின்றாள். தன் கூற்றைக் கேட்ட தோழி மருண்டு நோக்கினமை புலப்பட, “இதற்கு சந்தேகமில்லை எந்தன் தனித்தலைவர் வார்த்தை சத்தியமே” என்று வலியுறுத்துகின்றாள். இதனை இனி வரும் பாட்டுக்களிலும் உரைத்துக் கொள்க. (1)
|