பக்கம் எண் :

5705.

     நன்பாட்டு மறைகளுக்கும் மால்அயர்க்கும் கிடையார்
          நம்அளவில் கிடைப்பாரோ என்றுநினைத் தேங்கி
     என்பாட்டுக் கிருந்தேனை வலிந்துகலந் தணைந்தே
          இன்பமுறத் தனிமாலை இட்டநடத் திறைவர்
     முன்பாட்டுக் காலையிலே வருகுவர்மா ளிகையை
          முழுதும்அலங் கரித்திடுக ஐயுறவோ டொருநீ
     தன்பாட்டுக் கிருந்துளறேல் ஐயர்திரு வார்த்தை
          சந்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.

உரை:

     மாதே! இனிய பாட்டுக்களை யுடைய வேதங்களுக்கும் திருமால் பிரமன் முதலியோர்களுக்கும் பெறுதற் கரியவராகிய சிவபெருமான், நமக்குக் கிடைப்பாரோ என்று நினைந்து வருந்து என்னளவில் செயலற்றுக் கிடந்த போது என்னை வலிதிற் பற்றிக் கலந்து தழுவி இன்பம் மிகுமாறு ஒப்பற்ற மாலையிட்ட நடராசப் பெருமானாகிய தலைவர், நாம் எழுதற்கு முன்னே தாம் எழுந்து காலைப் பொழுதிலே நம்பால் வந்து சேர்வர்; அதனால் நமது மாளிகை முழுதும் அலங்காரம் செய்வாயாக; தலைவர் வருவாரோ என்று சந்தேகம் கொண்டு ஓரிடத்தே உன் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்து வாயில் வந்ததெல்லாம் சொல்லிக் கொண்டிராதே; நான் சொல்வது தலைவராகிய அவருடைய திருமொழியாதலால் அது முக்காலும் சத்தியம் என மனத்திற் கொள்க. எ.று.

     வேதங்களில் மந்திரங்கள் பாட்டுருவிலும் பிராமணங்கள் உரை வடிவிலும் இருத்தலால் சிறப்புடைய மந்திரங்களாகிய பாட்டுக்களை உடைமை பற்றி, வேதங்களை, “நன் பாட்டு மறைகள்” என்று நவில்கின்றாள். தனது சிறுமையையும் இறைவனது பெருமையையும் எண்ணி ஐயமுற்று வருந்தி இருப்பது விளங்க, “நம்மளவில் கிடைப்பாரோ என்று நினைந்து ஏங்கி என் பாட்டுக்கு இருந்தேன்” என இயம்புகின்றாள். என்பாட்டுக்கிருத்தல் - என்னளவில் செயலற்று இருத்தல். பாட்டுக் காலை - நீராடுங் காலம். தன்பாட்டுக்கு இருந்து உளறல் - தன்னுடைய வேலைகளை எண்ணிக் கொண்டு தன் வாயில் வந்ததைப் பேசுதல்.

     (2)