பக்கம் எண் :

5710.

     கிளைஅனந்த மறையாலும் நிச்சயிக்கக் கூடாக்
          கிளர்ஒளியார் என்அளவில் கிடைத்ததனித் தலைவர்
     அளையஎனக் குணர்த்தியதை யான்அறிவேன் உலகர்
          அறிவாரோ அவர்உரைகொண் டையம்உறேல் இங்கே
     இளைவடையேன் மாளிகையை மங்கலங்கள் நிரம்ப
          இனிதுபுனைந் தலங்கரிப்பாய் காலைஇது கண்டாய்
     தளர்வறச்சிற் றம்பலத்தே நடம்புரிவார் ஆணை
          சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.

உரை:

     மாதே! எண்ணில்லாத சாகைகளை யுடைய வேதங்களாலும் நிச்சயித்து உணர முடியாது விளங்குகின்ற ஞான ஒளியை உடையவரும், என்னளவில் அனுபவிக்கக் கிடைத்த தனித் தலைவரும் ஆகிய சிவபெருமான், யான் சிவத்தில் கலந்து கொள்ளுமாறு எனக்கு உபதேசித்தருளிய உண்மையை யான் ஒருத்தி அறிவேனேயன்றி உலகத்தில் உள்ள மற்றவர்கள் அறிய மாட்டார்கள்; அதனால் அவர்கள் சொல்லுவனவற்றைக் கொண்டு நீ இவ்விடத்தே சந்தேகம் கொள்ளல் வேண்டாம்; நான் அவர்களால் கீழ்மை அடையேன்; அதனால் நீ நம்முடைய மாளிகையைத் தூய்மை செய்து மங்கலப் பொருட்களைக் கொண்டு மிகவும் இனிமையாக அலங்காரம் செய்க; அவர் வருதற்கு இது நல்ல காலைப் பொழுதாகும் காண்; தளர்ச்சியின்றித் திருச்சிற்றம்பலத்தில் ஞான நடம் புரியும் நடராசப் பெருமானுடைய ஆணை மொழியாதலால் நான் சொல்லும் இது முக்காலும் சத்தியம் என உணர்க. எ.று.

     வேதத்திற்கு எண்ணிறந்த சாகைகள் உண்டு என்று வேதம் வல்லவர்கள் சொல்லுவதால், “கிளை அனந்த மறை” என்று எடுத்தோதுகின்றாள். சாகை - கிளை. கிளர் ஒளி - ஓங்கிய ஞான ஒளி. அப் பெருமான் தமது அருளுரையை எனக்கன்றிப் பிறர்க்கு உரைக்கவில்லையாதலால், “தலைவர் எனக்கு அளைய உணர்த்தியதை யான் அறிவேன் உலகர் அறிவாரோ” எனத் தெரிவிக்கின்றாள். அளைதல் -கலத்தல். இளிவு என்பது இளைவு என எதுகை நோக்கி வந்தது. எக்காலத்தும் தளர்ச்சி இல்லாதவர் நடராசப் பெருமானாதலால், அவரைத், “தளர்வறச் சிற்றம்பலத்தே நடம் புரிவார்” என உரைக்கின்றாள். பிறப்புறப்பிக்களால் உயிர்கள் எய்தும் தளர்ச்சி நீங்க சிற்றம்பலத்தே திருநடம் புரிகின்றார் என்பதும் உண்டாகையால், “தளர்வறச் சிற்றம்பலத்தே நடம் புரிவார்” என்று உரைப்பதும் பொருந்துவதாம்.

     (7)