5712. ஐயர்எனக் குள்ளிருந்திங் கறிவித்த வரத்தை
யார்அறிவார் நான்அறிவேன் அவர்அறிவார் அல்லால்
பொய்உலகர் அறிவரோ புல்லறிவால் பலவே
புகல்கின்றார் அதுகேட்டுப் புந்திமயக் கடையேல்
மெய்யர்எனை ஆளுடையார் வருகின்ற தருணம்
மேவியது மாளிகையை அலங்கரிப்பாய் விரைந்தே
தையல்ஒரு பாலுடைய நடத்திறைவர் ஆணை
சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
உரை: மாதே! தலைவராகிய சிவபெருமான் என்னுடைய உள்ளத்தில் இருந்தருளி உபதேசித்த உண்மை உரையை ஒருவரும் அறியார்கள்; ஆயினும் நான் அறிவேன்; அப்பெருமானும் அறிவார்; பிறர்களாகிய இந்தப் பொய்யான உலகமக்கள் அறிய மாட்டார்கள்; அதனால் தமது புல்லிய அறிவால் பலப்படப் பேசுகின்றார்கள்; அதனைக் கேட்டு நீ அறிவு மயங்கலாகாது; மெய்ம்மை உருவினராய் என்னை ஆட்கொண்டருளிய அத்தலைவர் என்பால் வருகின்ற காலைப் பொழுது வந்துவிட்டது; ஆகையால் நமது மாளிகையை விரைந்து அலங்கரிப்பாயாக; மங்கையாகிய உமாதேவி ஒருபால் இருக்கத் திருநடனம் செய்கின்ற தலைவராகிய இறைவருடைய ஆணை மொழி இதுவாதலால், இது முக்காலும் சத்தியம் என மனத்திற் கொள்க. எ.று.
ஐயர் - தலைவர். அப்பெருமான் உபதேசித்தருளுதற்கு உரிய இடம் உயிர்களின் உள்ளமாதலால், “உள்ளிருந்து இங்கு அறிவித்த” என உரைக்கின்றாள். நிலையில்லாத வாழ்வுடையவராதலால், “பொய்யுலகர்” என்று புகல்கின்றாள். குறைந்த அறிவினால் பேசுவதை, “புல்லறிவால் பலவே புகல்கின்றார்” என்றும், அதுகேட்டு அறிவு கலங்குதல் கூடாது என்பாளாய், “அது கேட்டு புந்தி மயக் கடையேல்” என்றும் கூறுகின்றாள். புந்தி மயங்கு - அறிவு கலங்குதல். கூத்தப் பெருமானை உமையாள் காண ஆடும் பரமன் என்று உயர்ந்தோர் உரைப்பதால், “தையல் ஒருபால் உடைய நடத்து இறைவர்” எனச் சிறப்பிக்கின்றாள். (9)
|