பக்கம் எண் :

5713.

     உடையவர்என் உளத்திருந்தே உணர்வித்த வரத்தை
          உலகவர்கள் அறியார்கள் ஆதலினால் பலவே
     இடைபுகல்கின் றார்அதுகேட் டையமுறேல் இங்கே
          இரவுவிடிந் ததுகாலை எய்தியதால் இனியே
     அடைவுறநம் தனித்தலைவர் தடையறவந் தருள்வர்
          அணிபெறமா ளிகையைவிரைந் தலங்கரித்து மகிழ்க
     சடையசையப் பொதுநடஞ்செய் இறைவர்திரு வார்த்தை
          சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.

உரை:

     மாதே! என்னை ஆளாக உடையவராகிய சிவபெருமான் என் உள்ளத்தில் எழுந்தருளி நான் தெளிய உணருமாறு உரைத்தருளிய உண்மையை உலக மக்கள் அறிய மாட்டார்கள்; ஆதலால் அவர்கள் தங்கட்கிடையே பல பேசுகின்றார்கள்; அவர்கள் பேசுவது கேட்டு நீ சந்தேகப்பட வேண்டாம்: இங்கே இருட் காலமாகிய இரவு கழிந்துவிட்டது; காலைப்பொழுதும் வந்துவிட்டது; இப்பொழுது நம்மைச் சார்தற்கு நம்முடைய ஒப்பற்ற தலைவராகிய பெருமான் ஒரு தடையுமின்றி வந்தருளுவார்; ஆதலால் நமது மாளிகையை அழகுற மிக விரைந்து அலங்காரம் செய்து மகிழ்வாயாக; தலையிலுள்ள சடைகள் அசையும்படி அம்பலத்தில் ஞான நடம் புரிகின்ற பெருமானுடைய மெய்மை மொழியாதலால் இது முக்காலும் சத்தியம் என உணர்க. எ.று.

     உடல் பொருள் ஆவி ஆகிய மூன்றையும் தனக்கு உடைமையாகக் கொண்டவர் என்பது, “குறிக்க உடையவர்” என ஓதுகின்றாள். இனிது பொருள் விளங்கப் புகன்ற மொழி என்பது விளங்க, “உளத்திருந்து உணர்வித்த வரம்” என உரைக்கின்றாள். இடை புகலுதல் - தங்களிடையே பேசிக் கொள்ளுதல். ஒளியின்றி இருள் நிறைந்த காலமாதலின் அதன் நீக்கத்தை, “இரவு விடிந்தது” எனவும், ஒளி நிறைந்த காலம் என்பது விளங்க, “காலை எய்தியது” எனவும் இயம்புகின்றாள். அடைவு - அடைதல். உலகியல் வாய்பாட்டில் பேசுவதால், “தலைவர் தடையற வந்தருள்வார்” என்று சாற்றுகின்றாள்.

     (10)