142. அனுபவ மாலை
அஃதாவது, சிவயோக போகானுபவத்தை உலகில் போகானுபவ வாய்பாட்டில் வைத்துரைத்தல். சிவபோகானுபவம் சிந்தைக்கும் மொழிக்கும் எட்டாத திருவுடையதாதலால் அதனைத் தலைவி, தோழி ஆகிய கற்பனை மகளிர் உரையாடும் வகையில் விளக்கப்படுகின்றது. இவ்விளக்கம் அழகிய பாமாலையாக அமைந்திருப்பதால் இதனை “அனுபவ மாலை” என்று பெரியோர் குறித்துள்ளனர். இதனை யோகாந்த ஞானானுபவம் என்று திருவருட்பாவை வாழ்வில் பலகாலும் பயின்றுணர்ந்த பெரியோர் ஒருவர் கூறுகின்றார்; யோகாந்தமாவது, சுபேச்சை, விசாரணை, தனுமானசி, சத்துவாபத்தி, அசஞ்சத்தி, பாதார்த்த பாவனை, துரிய கை என்ற ஏழு யோக க்ஷேத்திரங்களுக்கு முடிவில் விளங்குவதாகும். இவற்றின் விளக்கத்தை முறையே துர்ச்சங்க விற்சத்திகர்கள், ஞான சாத்திரம் பயின்றவர்கள், மூவேடனை நீத்தவர்கள், ஞான உணர்வுடையவர்கள், தவம் புரிபவர்கள், திரிபுடி ஏற்றவர்கள், சிவமாம் தன்மை எய்தினவர்கள் என ஒருவாறு யோக நூலார் விளக்குகின்றார்கள்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 5714. அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்
அணிந்துகொண்டேன் அன்பொடும்என் ஆருயிர்க்கும் அணிந்தேன்
எம்பரத்தே மணக்கும்அந்த மலர்மணத்தைத் தோழி
என்உரைப்பேன் உரைக்கஎன்றால் என்னளவன் றதுவே
வம்பிசைத்தேன் அன்றடிநீ என்அருகே இருந்துன்
மணிநாசி அடைப்பதனைத் திறந்துமுகந் தறிகாண்
நம்புறுபார் முதல்நாத வரையுளநாட்டவரும்
நன்குமுகந் தனர்வியந்தார் நன்மணம்ஈ தெனவே.
உரை: தோழி! திருச்சிற்றம்பலத்தில் ஞான நடனம் செய்கின்ற சிவனுடைய திருவடித் தாமரையை என் தலைமேல் சூடிக்கொண்டே அதனோடு அம்மரை உண்மையன்புடன் என் அரிய உயிர்க்கும் அணிந்து மகிழ்ந்தேன்; என் அளவில் நறுமணம் கமழும் அந்த அழகிய மலரின் நன்மணத்தை யான் என்னவென்று சொல்வேன்; வாயால் சொல்வதென்றால் என் சொல்லளவுக்கு அஃது அடங்குவதாக இல்லை; புதுமையான உரைக்கின்றேன் இல்லை; நீ என்னுடைய அருகே இருந்து உன்னுடைய அழகிய மூக்கடைப்பைப் போக்கி நன்கு திறந்து நுகர்ந்து அறிவாயாக; விரும்புகின்ற நில தத்துவம் முதல் நாத தத்துவம் வரையில் உள்ள நாட்டினர் யாவரும் இது உயர்ந்த நன்மணம் என்று சொல்லிப் பலகாலும் நுகர்ந்து வியக்கின்றார்கள் என அறிக. எ.று.
சிவபோகானுபவத்தை உரைக்கின்ற தலைவி சிவத்தின் திருவடியில் கமழும் சிவமணத்தை எடுத்தோதுகின்றாளாதலால் அதற்கு முதலாகிய திருவடியை, “அம்பலத்தே திருநடனம் செய் அடிமலர்” என்று சிறப்பிக்கின்றாள். சிவமணமாதலால் அதனை, “அன்போடு என் ஆருயிர்க்கும் அணிந்தேன்” என்று மொழிகின்றாள். எம்பரம் - என்னளவில். வம்பு - புதுமை. மணிநாசி - அழகிய மூக்கு. பௌதிக தேகமாதலால் மூக்கில் அடைப்பு உளதாவது பற்றி, “மணி நாசி உடைப்பு” என்று விதந்து கூறுகின்றாள். நிலம் முதல் நாத தத்துவம் ஈறாக உரைக்கப்படும் தத்துவங்களுக்குக் கலையும் புவனும் போகமும் கூறப்படுவது பற்றி, “நம்புறு பார் முதல் நாத வரை உளநாட்டவர்” என்று நவில்கின்றாள். நிவிர்த்தி முதலிய கலைகளுக்குப் புவனங்களும் தத்துவங்களும் தத்துவ நூலார் கூறுவதால் இவற்றை எடுத்துரைக்கின்றார் என அறிக. எல்லாத் தத்துவங்களிலும் வாழ்கின்ற புவன பதிகளை, “பார் முதல் நாத வரை உள நாட்டவர்” என்று நவில்கின்றாள். (1)
|