5715. கண்உறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும்
கனவேகண் டுளமகிழ்வேன் கனவொன்றோ நனவும்
எண்அடங்காப் பெருஞ்சோதி என்இறைவர் எனையே
இணைந்திரவு பகல்காணா தின்புறச்செய் கின்றார்
மண்உறங்கும் மலைஉறங்கும் வளைகடலும் உறங்கும்
மற்றுளஎல் லாம்உறங்கும் மாநிலத்தே என்
பெண்உறங்காள் எனத்தாயர் பேசிமகிழ் கின்றார்
பெண்கள் எலாம் கூசுகின்றார் பெருந்தவஞ்செய் கிலரே.
உரை: தோழி! நான் கண் மூடி உறங்குவதில்லை; ஆயினும் ஒருகால் உறக்கம் சிறிது வரினும் அவ்வுறக்கத்தில் என் கணவராகிய சிவத்தோடு கலந்துறையும் கனவே கண்டு என் மனம் மகிழ்வேன்; கனவு ஒன்றுதானே; நனவிலும் என் சிந்தையில் அடங்காத பெரிய ஒளியை யுடைய என்னுடைய தலைவர் இரவும் பகலும் என்னைக் கூடி இன்பம் எய்தச் செய்கின்றார்; அங்ஙனமிருக்க மண்ணுலகும் மலையுலகும் சங்கு முழங்கும் கடல் உலகும் மற்றும் உள்ளன எல்லாம் உறங்குகின்ற பெரிய நில வுலகத்தில் நம்முடைய பெண்ணாகிய தலைவி உறங்குகின்றாளில்லை என்று தாய்மார்கள் பலரும் தமக்குள் பேசி மகிழ்கின்றார்கள்; மற்றைப் பெண்களோ எனின் வாயாற் பேசுதற்குக் கூசுகின்றார்கள்; அதற்குக் காரணம் அவர்கள் பெரிய தவம் யாதும் செய்திலர் என அறிக. எ.று.
காதல் வயப்பட்ட மகளிர்க்குக் கண்ணுறக்கம் வாரா தென்பது பற்றி, “கண் உறங்கேல்” என்று தலைவி கூறுகின்றாள். காதல் நோயுற்றவர்க்குக் கனவு மருந்தாய்ப் பயன்படும் என்பது பற்றி, “என் கணவரொடு கலக்கும் கனவே கண்டு உளம் மகிழ்வேன்” என்று மொழிகின்றாள். “நனவினால் நல்காதவரைக் கனவினால் காண்டலின் உண்டு என் உயிர்” என்று திருக்குறள் கூறுவது காண்க. இறைவன் அருளும் சிவபோகத்தை இரவு பகலின்றி எக்காலத்தும் நுகர்வது விளங்க, “கனவு ஒன்றோ நனவும் எண் அடங்காப் பெருஞ்சோதி என் இறைவர் எனையே இணைந்து இரவு பகல் காணாது இன்புறச் செய்கின்றார்” என்று மொழிகின்றாள். வளைகடல் - சங்குகள் நிறைந்து வாழும் கடல். மண் முதலிய யாவும் உறங்குகின்ற நிலவுலகத்தில் என் மகள் ஒருத்தியே சிவபோகப் பேற்றால் உறக்கமின்றிக் கிடக்கின்றாள் என்று நற்றாய் செவிலித் தாய் முதலிய தாய்மார்கள் உண்மை யுணர்ந்து தம்மிற் கூடியிருந்து பேசி மகிழ்கின்றார்கள் என்பாளாய், “மாநிலத்தே தமது பெண் உறங்காள் எனத் தாயர் பேசி மகிழ்கின்றார்” என்று சொல்லுகின்றாள். ஏனைய உலகியற் பெண்கள் எனது சிவபோகானுபவத்தை உணராமையால் உலகியற் போக உணர்ச்சி போல எண்ணி இகழ்கின்றார்கள் என்று கூறுவாளாய், “பெண்கள் எல்லாம் கூசுகின்றார் பெருந்தவம் செய்கிலரே” என்று உரைக்கின்றாள். பெருந்தவம் - சிவபோகத்தைப் பெறுதற்குரிய சிவயோக சிவஞானங்களைப் “பெருந்தவம்” என்று சுட்டுகின்றாள். (2)
|