5716. எல்லாஞ்செய் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
எவ்வுலகில் யார்எனக்கிங் கீடுரைநீ தோழீ
நல்லாய்மீக் கோளுடையார் இந்திரர்மா முனிவர்
நான்முகர்நா ரணர்எல்லாம் வான்முகராய் நின்றே
பல்லாரில் இவள்புரிந்த பெருந்தவத்தை நம்மால்
பகர்வரிதென் கின்றார்சிற் பதியில்நடம் புரியும்
வல்லானை மணந்திடவும் பெற்றனள்இங் கிவளே
வல்லாள்என் றுரைக்கின்றார் நல்லார்கள் பலரே.
உரை: தோழி! எல்லாம் செயல் வல்ல தலைவராகிய சிவபெருமான் என்னை ஞான மணம் புரிந்து கொண்டாராதலால் எவ்வுலகில் யாவர் எனக்கு ஒப்பாவார்கள்; இப்பொழுது நீயே அதனை எண்ணி உரைப்பாயாக; நற்பண்புடையவளே! உயர்ந்த கொள்கையை உடையவர்களாகிய பிரமர்களும் நாரணர்களும் இந்திரர்களும் பெரிய முனிவர்களும் சிவாகாசத்தைச் சிந்திப்பவர்களாய் எதிரே நின்று மகளிர் பலரும் இவள் செய்த பெரிய தவத்தின் சிறப்பை நம்மால் எடுத்துரைக்க முடியாது என மொழிகின்றார்கள்; ஞான சபையில் திருநடம் புரியும் எல்லாம் வல்ல பெருமானை ஞான மணம் செய்து கொள்ளும் பேரும் பெற்றனளாதலால் இவளே எல்லாப் பெண்களினும் வல்லவள் என்று நன்மகளிர் பலரும் நவில்கின்றார்கள். எ.று.
வரம்பில் ஆற்றலுடையவர் என்பது பற்றிச் சிவனை, “எல்லாம் செய்வல்ல துரை” என்று சிறப்பிக்கின்றாள். நல்லாய் என்றது தோழியை. மீக்கோள் - உயர்ந்த கொள்கை. சிவம் விளங்கும் சிவாகாசத்தை சிந்திக் கொண்டிருப்பதால், “வான் முகராய் நின்று” என்று கூறுகின்றாள். பெருந்தவம் - சிவஞான சிவயோகத்தால் பெறும் போகத்தை எய்துவிக்கும் தவத்தை, “பெருந்தவம் - சிவஞான சிவயோகத்தால் பெறும் போகத்தை எய்துவிக்கும் தவத்தை, “பெருந்தவம்” என்று புகழ்கின்றாள். சிற்பதி - ஞான சபை. வல்லான் - எல்லாம் வல்லவன். வல்லாள் - ஞான யோகங்களால் வல்லவள். நல்லார்கள் - பெண்கள்; நன்ஞான நல்யோகங்களை உடைய பெண்கள் என்று உரைப்பினும் அமையும். (3)
|