5727. கண்ணாறு படும்எனநான் அஞ்சுகின்றேன் பலகால்
கணவர்திரு வடிவழகைக் கண்டுகண்டு களிக்கில்
எண்ணாஎன் ஆசைவெள்ளம் என்சொல்வழி கேளா
தெனைஈர்த்துக் கொண்டுசபைக் கேகுகின்ற தந்தோ
பெண்ணாசை பெரிதென்பர் விண்ணாளும் அவர்க்கும்
பெண்ணாசை பெரிதலகாண் ஆணாசை பெரிதே
உண்ணாடிப் பற்பலகால் கண்ணாறு கழிக்கல்
உறுகின்றேன் தோழிநின்னால் பெறுகின்ற படியே.
உரை: தோழி! கண்ணேறு படும் என்று நான் அஞ்சுகின்றேன்; பலமுறையும் என் கணவராகிய சிவனுடைய வடிவழகைக் கண்டு கண்டு மகிழ்வேனாயின் விளைவு கருதாத என் ஆசை வெள்ளம் போல் பெருகி என் சொல் வழிக் கேளாமல் என்னை இழுத்துக்கொண்டு அவர் நடம் புரியும் ஞானசபைக்குச் செல்லுகின்றது; ஐயோ, பெண்ணினுடைய ஆசை மிகவும்பெரியது என்று பலரும் கூறுவர்; தேவர் உலகத்தை ஆளும் தேவர்களுக்கு உள்ள ஆசை நோக்கப் பெண்ணின் ஆசை பெரிதன்று; ஆண் மக்களின் ஆசைதான் பெரிதாகும்; உள்ளத்தால் ஆராய்ந்து பலகாலும் கண்ணேறு கழித்தலைச் செய்கின்றேன்; அது நீ காட்டுகின்றபடியே ஆகும். எ.று.
கண்ணேறு என்பது நூல் வழக்கு. அது கண்ணாறு என உலக வழக்கில் உளது. கண்ணேறு என்பது காண்பவர் காட்சியால் காணப்பட்டவர்க்கு ஊறு உண்டாவது; அவருடைய வடிவழகைப் பன்முறையும் காணக் காண அவர் திருமேனிக்கு ஊறு உண்டாகுமோ என அஞ்சுகிறேன் என்பாளாய், “கண்ணாறு படும் என நான் அஞ்சுகின்றேன்” என்று கூறுகின்றாள். கண்ணேற்றுக்கு அஞ்சி இனிக் காணாதொழியலாம் என்றாலோ காண விழையும் ஆசை பெருகி என் அறிவு வழி நின்று அடங்காமல் பெருகுகின்றது என்றற்கு, “என் ஆசை வெள்ளம் என் சொல்வழிக் கேளாது” என்றும், என்னை அவன் நின்று நடம் புரியும் ஞானசபைக்கே கொண்டு செல்கின்றது என்பாளாய், “எனை ஈர்த்துக் கொண்டு சபைக்கு ஏகுகின்றது” என்றும் கூறுகின்றாள். உலகவர் பெண்களின் ஆசை பெரிது என்று சொல்வாராயினும் விண்ணுலகத் தேவர்களின் ஆசையை நோக்கப் பெண்ணாசை பெரிதாகாது என உரைத்தற்கு, “பெண்ணாசை பெரிதல காண்” எனவும், “ஆண் ஆசை பெரிது” எனவும் உரைக்கின்றாள். கண்ணேறு கழித்தலால் நீ அடையும் பயன் யாதோ அதனையும் நானும் பலகாலும் கண்ணேறு கழித்து அமைகின்றேன் என்பது கருத்து. கழிக்கின்றேன் என்பது கழித்தல் உறுகின்றேன் என விரிந்து நின்றது. (14)
|