பக்கம் எண் :

573.

     தெரித்தால் அன்றிச் சிறிதேனும்
          தெரிவொன் றில்லாச் சிறியேனைப்
     பிரித்தாய் கூடும் வகைஅறியும்
          பெற்றி என்னே பிறைமுடிமேல்
     தரித்தாய் அடியேன் பிழைபொறுக்கத்
          தகுங்காண் துன்பம் தமியேனை
     அரித்தால் கண்டிங் கிரங்காமை
          அந்தோ அருளுக் கழகேயோ.

உரை:

     பிறைத் திங்களைச் சடை முடிமேல் தாங்குபவனே, தெரிவித்தாலன்றி எதனையும் சிறிதும் தெரிந்துகொள்ளும் அறிவு சிறிதும் இல்லாத சிறுமையுடைய என்னை மலமறைப்பால் பிரித்துப் பிறப்பிறப்பில் புகுத்திவிட்டாய். அவற்றினின்றும் நீங்கி நின் திருவடியை அடையும் வகைகளை அறிந்துகொள்ளும் நெறிதான் என்னையோ; அடியேன்செய்த பிழைகள் நீ பொறுக்கத் தக்கனவேயாக, அவற்றால் உண்டாகுந் துன்பம் தனியனாகிய என்னை வருத்துவது கண்டும் மனமிரங்காமலிருப்பது அந்தோ நின் திருவருளுக்கு அழகாகுமோ? எ.று.

     கருணை வேண்டி விண்ணப்பிக்கின்றா ராகலான், தீவினையால் தேய்ந்து போந்த பிறைத்திங்களைச் சடையில் தாங்கிய அருட் செயலை நினைவு கூர்வாராய், “பிறை முடி மேல் தரித்தாய்” என்கின்றார். அறிவித்தாலன்றி அறியுந் திறமில்லாத உயிரினத்தைச் சேர்ந்தவர் என்பது கூறுவாராய்த் “தெரித்தாலன்றிச் சிறிதேனும் தெரிவொன்றில்லா” என்கின்றார். “அறிவிக்க அன்றி யறியா உளங்கள்” என மெய்கண்டாரும், “காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே” (தனித்தான்) என்று திருநாவுக்கரசரும் கூறுவது காண்க. “சிறிது” என்றது பொருள்மேல் நின்றது. தெரிவு, தெரிதல், ஒன்று என்ற விடத்துச் சிறப்பும்மை தொக்கது. சிறிதும் என்னும் பொருளாகிய இச்சொல் பொருள் முற்றவும் தெரியமாட்டாமை யுணர நின்றது. இவ்வாறு எல்லாப் பொருளையும் முற்றவும் காணமாட்டாத சிறுமை பற்றித் தம்மைச் “சிறுமையேன்” என்று தெரிவிக்கின்றார். கேவலத்தில் உயிர்த் தொகையுள் ஒன்றாய்க் கிடந்த ஆன்மாவை, மலப்பிணிப்பின் இயல்பு கண்டு, சகலத்திற் புகுத்தி, மண்ணிற் பிறந்திறந்து வாழச் செய்தமை தோன்றச் “சிறியேனைப் பிரித்தாய்” என்கின்றார். மலமாயா காரியங்களின் தொடர்பால், வினை வலைப்பட்டுச் சிக்குற்று நீங்கும் நெறியறியாமல் அலமருகின்ற செயல்பற்றிக் “கூடும் வகையறியும் பெற்றி என்னே” என்று வருந்துகிறார். இதனை யெண்ணியே, “நின்னையே யறியேன், நின்னையே யறியும் அறிவறியேன்” (அடைக்) என மாணிக்கவாசகரும் வருந்தி யுரைப்பது காண்க. அறிவின் சிறுமையாலும் உடன் கூடி மயக்கும் கருவி கரணங்களாலும் மாய வாழ்க்கைக் கூறுகளாலும் பிழைகள் உளவாகின்றன வாகலின், அவற்றைப் பொறுத்தலால் நின் அருட்குக் குறைவொன்றும் வராமையின், “பிழை பொறுக்கத் தகுங்காண்” என்கின்றார். “பிழை பொறுத்தல் நினக்குப் பெருமையே யென்பது பற்றியன்றோ மணிவாசகர் முதலியோர், “பிழைத்தவை பொறுக்கை யெல்லாம் பெரியவர் கடமை போற்றி” (சதக) என்றெல்லாம் முறையிட்டுள்ளனர். புலனால் அரிப்புண்டு வருந்தும் நிலையில் அத்துன்பத்தினை நீக்கும் சார்பின்றித் தனித்துள்ளேன் என்பார், “தமியேன்” என்று தம்மைக் குறிக்கின்றார். “எறும்பிடை நாங்கூ ழெனப் புலனாலரிப்புண்டலந்த வெறுந்தமியேனை” எனவரும் திருவாசகம் ஈண்டு நினைக்கத்தக்கது. அரித்தல் - வருத்துதல். துன்புறுவோர் துன்பங் கண்டிரங்காமை இன்னருள் ஆகாமையின், “இரங்காமை அந்தோ அருளுக் கழகேயோ” என்கின்றார்.

     இதனால், தாம் எய்தி வருந் துன்பத்திற் கேதுவாகிய பிழைகட்குரிய காரணங்களைக் காட்டிப் பிழை பொறுத்தருள் புரிதல் வேண்டும் என்கின்றார்.

     (3)