பக்கம் எண் :

579.

     அன்றும் சிறியேன் அறிவறியேன்
          அதுநீ அறிந்தும் அருள்செய்தாய்
     இன்றும் சிறியேன் அறிவறியேன்
          இதுநீ அறிந்தும் அருளாயேல்
     என்றும் ஒருதன் மையன் எங்கள்
          இறைவன் எனமா மறைகள்எலாம்
     தொன்று மொழிந்த தூமொழிதான்
          சூது மொழியோ சொல்லாயே.

உரை:

     இளமையாற் சிறுமை யுடையவனாகிய என்னுள்ளத்தை உன்பால் ஈர்த்துக் கொண்ட காலத்தில் அறிதற் குரியவற்றை அறியாதவனா யிருந்ததை நீ அறிந்தே எனக்கருள் புரிந்தாய்; இந்நாளிலும் அச்சிறுமையே உடையேனாதலின் அறிவறியேனாய் உள்ளேன்; எனது இந் நிலைமையை நீ நன்கறிந்தும் அருள் ஞானம் வழங்கா தொழிகுவையாயின், எக்காலத்தும் ஒரு தன்மையன் எங்கள் இறைவன் என்று பெரிய சிவாகமங்கள் பண்டை நாளில் மொழிந்த தூய உரைகள் பொய்யோ, மெய்யோ சொல்லுக. எ.று.

     அந்நாள் என்பது போதிய அறிவு வளராத இளமைக் காலம். அறிய வேண்டிய நூல்களை முற்ற அறியாக் காலத்திலேயே இறைவன் தம்மை ஆட்கொண்டருளினான் என்பார், “அன்றும் சிறியேன் அறிவறியேன்” என்று சொல்கிறார். ‘சிவன் எம்பிரான் என்னையாண்டு கொண்டான் என் சிறுமை கண்டும்’ என்பது திருவாசகம். அறிவால் நிறைத்தற்குரிய நூல்கள் “அறிவு” எனப்படுகின்றன. இரண்டாவதாக வரும் அறிவு மெய்யுணர்வு. அறிவதறிவு என்பதனால் ஈண்டு அறிவென்றது “கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார்” எய்தும் உண்மையறிவு. உண்மை யறிவு தலைப்பட்டும் உனது திருவருள் ஞானம் எய்தப் பெற்றிலேன் என்பாராய், “இன்றும் சிறியேன் அறிவறியேன் இதுநீ யறிந்தும் அருளாயேல்” என இயம்புகின்றார். ஒரு தன்மையாவது கால இடங்கட் கேற்ப மாறாமை. “தாங் கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையன்” (தெள்ளே) என்று திருவாசகம் முதலிய தமிழ் மறைகள் ஓதுவதை ஈண்டு “என்றும் ஒருதன்மையன் எஙகள்இறைவன் என மாமறைகள் எல்லாம் தொன்று மொழிந்த தூ மொழி” என்று எடுத்துரைக்கின்றார். பரிமேலழகரும் “முதற்பொருள் விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒருதன்மைத்து” (குறள்-358) என்று உரைப்பது காண்க. தொன்று மொழிந்தது-முன்னமே சொன்னது. ஒரு காலத்து அருள் செய்தும், ஒரு காலத்து அருள் செய்யாமையும் நினைந்து “சூது மொழியோ” என்கின்றார். “என்றும் ஓர் இயல்பினர் என நினைவரியவர்” (நெல்வே) என ஞானசம்பந்தரும், “ஒத்து ஒவ்வாதன செய்து உழல்வார் ஒரு பித்தர் காண் நும் பெருமானடிகள்” (கடவு) என நாவுக்கரசரும் கூறுதலால், “சூது மொழியோ” என வினவுகிறார். அருளப்படுவாரின் தகவு, தகவின்மை நோக்கியும், ஞான வன்மை மென்மை நோக்கியும் இறைவனுடைய அருட் செய்கைகள் ஒத்தும் ஒவ்வாதனவாகவும் பல இயல்பினவாகவும் இருத்தலின் மறைகள் ஓதுவன பொய்யல்ல என்பதும் விளங்க எதிர்மறை ஓகாரம் பெய்து “சூது மொழியோ” என்று சொல்லுகின்றார். இங்ஙனம் ஒத்தன போலவும் ஒவ்வாதன போலவும் இறைவன் அருட் செயல்கள் தோன்றுவது கண்டே ஞானசம்பந்தர் “ஆட்பாலவர்க் கருளும் வண்ணமும் ஆதி மாண்பும் கேட்பான் புகில் அளவில்லை; கிளக்க வேண்டா” (பாசுரம்) என்று கூறுவது ஈண்டு நினைவு கூரற்பாலது.

     இதனால், இறைவன், அருள் திறத்தின் வேறுபாடு காட்டி முறையிட்டவாறு.

     (9)