5802. சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச்
சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய்
பிற்சமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய்
பித்தர்என்றே பெயர்படைத்தார்க் கெப்பெயர்ஒவ் வாதோ
அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர்என் பெயரும்
அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே
சிற்சபையில் என்கணவர் செய்யும்ஒரு ஞானத்
திருக்கூத்துக் கண்டளவே தெளியும்இது தோழி.
உரை: தோழி! ஞான சபையில் நடித்தருளுகின்ற தலைவராகிய சிவபெருமானுக்குக் கூறப்படும் அருகர் புத்தர் முதலிய புறச்சமய பெயர்கள் பொருத்தம் ஆகுமோ என்று என்னைக் கேட்கின்றாய்; பிற்காலத்தவர் வகுத்துரைக்கும் பெயரும் அவர்க்குப் பொருந்தும் என அறிவாயாக; அவருக்கு வழங்கும் பெயர்களில் பித்தர் எனவும் பெயருண்டாதலால் பித்தர் என்று பெயர் கொண்ட அவருக்கு எப்பெயர்தான் பொருந்தாது; அந்தச் சமயவாதிகள் கூறும் பெயர்கள் மட்டுமின்றி உன் பெயரும் என் பெயரும் அவர் பெயரே என அறிக; வேறு எவ்வகை உயிர்களின் பெயரும் அவர் பெயரே ஆகும்; ஞான சபையில் எழுந்தருளும் என் கணவராகிய அவர் செய்யும் திருக்கூத்து கண்ட மாத்திரத்தே நான் சொல்லுவதன் உண்மை உனக்குத் தெளிவாகும். எ.று.
சிற்சபையின்கண் எழுந்தருளி ஞானத் திருக்கூத்தாடுவது சிவனுக்கு இயல்பாதலால், “சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார்” என்று தலைவி உரைக்கின்றாள். அருக மதம் - புத்த மதம் முதலியவற்றைப் “புறச் சமயம்” என்பர். வேதத்தைப் பிரமாணமாய்க் கொள்ளாமையால் அச்சமயங்களை, “புறச் சமயங்கள்” என்று கூறுகின்றாள். முன்பாட்டில் சிவனுக்குப் பெயர் அருகர் புத்தர் ஆதி என்பேன் என்று தலைவி சொன்னாளாதலால் இங்கே தோழி சிவனுக்குப் புறச் சமயப் பேர் பொருந்துவதோ என்று கேட்கின்றாள். நம்பியாரூரர் வரலாற்றால் சிவனுக்குப் பித்தர் என்ற பெயர் வந்தபடியால், “பித்தர் என்ற பெயர் படைத்தார்க்கு எப்பெயர் ஒவ்வாதோ” என்று தலைவி சொல்லுகின்றாள். பெயர் எனப்படுபவை யாவும் சிவன் பெயரே என்று வற்புறுத்துவதற்கு, “நின் பெயர் என் பெயரும் அவர் பெயரே எவ்வுயிரின் பெயரும் அவர் பெயரே” என்று இயம்புகின்றாள். ஞான நடம் கண்டு ஞான மயமாகிய ஞானிகட்கு யாவும் சிவமாய்த் தோன்றுதலால், “சிற்சபையில் என் கணவர் செய்யும் ஒரு ஞானத் திருக்கூத்து கண்டளவே இது தெளிவாகும்” என்று தலைவி தோழிக்குச் சொல்லி விளக்குகின்றாள் என்பதாம். (89)
|