பக்கம் எண் :

5803.

     எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும்
          இயல்உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும்
     மெய்ப்பொருளாம் சிவம்ஒன்றே என்றறிந்தேன் உனக்கும்
          விளம்புகின்றேன் மடவாய்நீ கிளம்புகின்றாய் மீட்டும்
     இப்பொருள்அப் பொருள்என்றே இசைப்பதென்னே பொதுவில்
          இறைவர்செயும் நிரதிசய இன்பநடந் தனைநீ
     பைப்பறவே காணுதியேல் அத்தருணத் தெல்லாம்
          பட்டநடுப் பகல்போல வெட்டவெளி யாமே.

உரை:

     தோழி! எல்லாப் பொருள்கட்கும் எல்லா உயிர்கட்கும் உள்ளும் புறமுமாய் அமைவது இயல்பாகிய உண்மை அறிவு இன்பவடிவமாய் ஞான சபையில் நடித்தருளும் சிவபரம்பொருள் ஒன்றே என்று நான் அறிந்து கொண்டேன்; அதனையே உனக்கும் சொல்லுகின்றேன்; இளையவளாகிய தோழியே, நீ கேட்டு அமையாமல் மேலும் பேசுகின்றாய்; இப்பொருள் என்றும் அப்பொருள் என்றும் நீ மேன்மேலும் சொல்லுவது எற்றுக்கு? ஞான சபையின்கண் சிவபெருமான் செய்தருளும் பேரானந்த இன்பத் திருக்கூத்தினை நீ மெதுவாகக் காண்பாயானால் அத்தருணத்தில் எல்லா உண்மைகளும் நடுப் பகல் போல உனக்கு விளக்கமாய்த் தெரிந்தவிடும் என அறிக. எ.று.

     உண்மையைச் சத்து என்றும் அறிவைச் சித்து என்றும் இன்பத்தை ஆனந்தம் என்றும் குறித்துச் சிவ வடிவத்தை, “சச்சிதானந்தம்” என வழங்குவது பற்றி, “உண்மை அறிவு இன்ப வடிவாகி நடிக்கின்ற மெய்ப் பொருளாம் சிவம்” என்று அறிந்தோர் கூறுகின்றனர்; அதனால் தலைவியும் இவ்வாறு இயம்புகின்றாள். சிவம் சச்சிதானந்தம் என எடுத்துரைக்கும் தோழி வேறு பல கூறத் தொடங்கியது பற்றி, “மடவாய் நீ கிளம்புகின்றாய் இப்பொருள் அப்பொருள் என்று மீட்டும் இசைப்பது என்னே” என்று தலைவி இடித்துரைக்கின்றாள். சிவானந்தானுபவத்தின்கண் சிந்தை சிவமாய் விடுதலின் அதிசயிக்கும் வாய்ப்பு இல்லாதொழிதலின் சிவானந்தத்தை, “நிரதிசய இன்ப நடம்” என்று இசைக்கின்றாள். பைப்பறக் காணுதல் - அமைதியாக ஆத்திரப்படாமல் கண்டு மகிழ்தல். ஐயம் திரிபற விளங்குவ தொன்றனை, “நடுப்பகல் போல வெட்ட வெளியாம்” என்னும் உலக வழக்குப் பற்றி, “நடுப் பகல் போல வெட்ட வெளியாம்” என்று தலைவி விளம்புகின்றாள்.

     (90)