5804. காணாத காட்சியெலாம் காண்கின்றேன் பொதுவில்
கருணைநடம் புரிகின்ற கணவரைஉட் கலந்தேன்
கோணாத மேல்நிலைமேல் இன்பஅனு பவத்தில்
குறையாத வாழ்வடைந்தேன் தாழ்வனைத்தும் தவிர்ந்தேன்
நாணாளும் திருப்பொதுவில் நடம்பாடிப் பாடி
நயக்கின்றேன் நற்றவரும் வியக்கின்ற படியே
மாணாகம் பொன்ஆகம் ஆகவரம் பெற்றேன்
வள்ளல்அருள் நோக்கடைந்தேன் கண்டாய்என் தோழி.
உரை: தோழி! ஞான சபையின்கண் அருட் கூத்தாடுகின்ற என்னுடைய கணவராகிய சிவபெருமானைக் கண்டு உள்ளத்தாற் கலந்து கொண்டேனாதலால் இதுகாறும் காணாத காட்சிகள் எல்லாவற்றையும் நான் காணுகின்றேன்; மாறுபடாத சிவானந்த மேல் நிலையை அடைந்து சிவபோகானுபவத்தில் தோய்ந்து குறைவில்லாத சிவபோக வாழ்வைப் பெற்றுத் தாழ்வு வகை யாதுமின்றி உயர்ந்துள்ளேன்; நாடோறும் ஞானசபையில் சிவனது ஞான நடம் கண்டு அதனைப் பாடிப் பாடி மகிழ்கின்றேன்; நல்ல தவயோகிகளும் வியந்து மகிழும் நிலைமை இதுவாகும்; மாண்புடைய என் உடம்பு பொன் உடம்பாய் விளங்கப் பெற்றேன்; வள்ளலாகிய சிவனது திருவருள் நோக்கமும் நிரம்பப் பெற்றுக் கொண்டேன்; காண்பாயாக. எ.று.
இதுகாறும் யாராலும் கண்டறியப்படாத சிவயோகக் காட்சிகள் என்பதற்கு, “காணாத காட்சி யெலாம் காண்கின்றேன்” என்று கூறுகின்றாள். அவை வாக்கு மனங்கட்கு எட்டாதவையாதலால், “காண்கின்றேன்” என்று சொல்லித் தலைவி ஓதுகின்றாள். செம்மையேயாய சிவபதம் என மணிவாசகர் முதலியோர் கூறுவது பற்றிச் சிவபோக நிலையை, “கோணாத மேல் நிலை” என்றும், அங்கே இன்பானுபவமே நிகழ்வது பற்றி, “இன்பானுபவத்தில் குறையாத வாழ்வடைந்தேன்” என்றும், அந்நிலையிலும் உலகப் போகானுபவம் போல உயர்வு தாழ்வுகள் என்ற ஐயம் உண்டாகாமை பொருட்டு, “தாழ்வனைத்தும் தவிர்ந்தேன்” என்றும் உரைக்கின்றாள். ஞான சபையின்கண் சிவத்தின் திருநடனத்தைப் பாடிப் பாடி விருப்பம் மேலிடுவதே சிவபோகம் என்றற்கு, “திருப் பொதுவில் நடம் பாடிப் பாடி நயக்கின்றேன்” என்றும், அதையே தவயோகிகளும் செய்கின்றனர் என்பாளாய், “நற்றவரும் வியக்கின்றபடியே” என்றும் இயம்புகின்றாள். திருவருள் நோக்கத்தால் தான் சிவானந்த ஞான உருப்பெற்றமை விளங்க, “மாணாகம் பொன்னாகம் ஆக வரப் பெற்றேன்” என அறிவிக்கின்றாள். (91)
|