பக்கம் எண் :

5805.

     சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த
          சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே
     ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே
          அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்
     ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம்
          உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம்
     சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச்
          சுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.

உரை:

     தோழி! சாதி சமயங்களிலே பலவாய் வகுத்துரைக்கப்பட்ட சாத்திரங்களாகிய குப்பைகள் யாவற்றையும் பயனுடையன அல்ல என்று என் உள்ளத்தில் எழுந்தருளி முன்னாளில் எனக்குச் சிவ பரம்பொருள் அறிவித்தபடியே என்பால் அன்பு கொண்டு அச்சிவபெருமான் உண்மை நிலையை எனக்குணர்த்த அறிந்து கொண்டேன்; பல நல்ல நூல்களைப் படித்துணர்ந்த ஞானவான்கள் புகழ்ந்தோதும் சமரச சன்மார்க்கத்தை அடைந்து ஞான சபையைக் கண்டு மெய்ப் பொருளாகிய அருட் சோதி விளங்கும் நடனத்தைப் புரிகின்ற சிவபெருமானும் என் உயிர்க்குயிராம் பதிப்பொருளும் சுத்தப் பரிபூரண சிவமும் ஆகிய பரம்பொருளை என் உள்ளத்திலே கொண்டு மகிழ்வுற்றேன். எ.று.

     அவ்வச் சமயங்கட்கு ஏற்ப சாதி ஆசார சங்கற்ப விகற்பங்களை வகுத்துரைப்பது பற்றிச் சாத்திரங்களை ஒதுக்கினமை விளங்க, “சாதி சமயங்களிலே வீதி பல வகுத்த சாத்திரக் குப்பைகள்” என்று வெறுத்துரைக்கின்றாள். பாத்திரமன்று - கொள்ளத் தகுவன அல்ல. சாத்திரங்கள் பலவற்றின் பொய்ம்மையை இளமையிலே வடலூர் வள்ளற் பெருமான் அறிந்து கொண்டமை புலப்பட, “ஆதியில் என் உளத்திருந்து அறிவித்தபடியே” என்று தெரிவிக்கின்றார். அதுவே முதிர்ந்த ஞான நிலையிலும் விளங்கினமை புலப்பட, “அன்பால் இன்று உண்மை நிலையை அறிவிக்க அறிந்தேன்” என்று உரைக்கின்றாள். சிவஞானப் பேற்றுக்குச் “சமரச சன்மார்க்கமே வாயில் என்பதை வற்புறுத்தற்கு, “சமரச சன்மார்க்கம் உற்றேன் சிற்சபை காணப்பெற்றேன்” என்று தெரிவிக்கின்றாள். தாம் பெற்ற சிவபோகானுபவத்தை வேறு வகையால் கூறலாகாமையின், “மெய்ப்பொருளாம் சோதி நடத்தரசே” என்றும், “உயிர்க்குயிராம் பதி” என்றும், “சுத்த சிவ நிறைவு” என்றும் தெரிவிக்கின்றாள். இந்தச் சுத்த சிவ நிறைவையே தாயுமானவரும், “பரிபூரணானந்தம்” என்று பகர்கின்றார்.

     (92)