5806. சரியைநிலை நான்கும்ஒரு கிரியைநிலை நான்கும்
தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன்
உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்
ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன்
அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்
ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்
பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம்
பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி.
உரை: தோழி! சரியை நான்கும் கிரியை நான்கும் தனித்த யோகம் நான்கும் ஆகிய இவற்றைத் தனித்தனியே கண்டு ஆராய்ந்தறிந்தேன்; உணர்தற்குரிய ஞானம் நான்கையும் அருள் ஞானத்தால் ஒன்றொன்றாக அறிந்து அவற்றின் உண்மை நிலையையும் உணர்ந்தேன்; அரிய பொருளினவாகிய சித்தாந்தம் வேதாந்தம் முதலிய ஆறு அந்தங்களையும் அறிந்து கொண்டேன்; அவற்றிற்கு அப்பால் நின்று விளங்கும் பெருமை பொருந்திய சிவானுபவத்தால் சமரச சன்மார்க்க ஞானம் பெற்று இவ்வுலகில் இறவாத நிலையையும் எய்தி உள்ளேன்; இதனை நீ நன்கு அறிந்து கொள்வாயாக. எ.று.
சரியை நான்காவன : சரியையிற் சரியை, சரியையிற் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம் என்பனவாம். இவ்வாறே கிரியையில் நான்காவன : கிரியையில் சரியை, கிரியையிற் கிரியை, கிரியையில் யோகம், கிரியையில் ஞானம் என்ற நான்குமாம். யோகம் நான்காவன: யோகத்திற் சரியை, யோகத்தில் கிரியை, யோகத்தில் யோகம், யோகத்தில் ஞானம் என்பனவாகும். ஞானம் நான்காவன : ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் என்ற நான்குமாம். இவற்றுள் திருக்கோயில் அலகிடல், மெழுகல் முதலியன சரியையிற் சரியை, மூர்த்திகள் இருபத்தைந்தனுள் விநாயகக் கடவுள் முதலிய ஆவரண மூர்த்திகளில் ஒரு மூர்த்தியைப் பூசித்தல் சரியையிற் கிரியை எனப்படும். நெஞ்சின்கண் உருத்திரக் கடவுளைத் தியானம் செய்தல் சரியையில் யோகம்.. அத்தியான பாவனையில் உரைப்பால் ஓர் அனுபவ உணர்வு நிகழ்தல் சரியையில் ஞானம். சிவபூசைக்கு வேண்டப்படும் உபகரணங்களெல்லாம் செய்து கொள்ளுவது சரியையிற் கிரியை. சிவாகமத்தில் விதித்த வண்ணம் ஐவகைச் சுத்திகளை முற்படச் செய்து சிவலிங்க வடிவில் பூசனை செய்வது கிரியையில் கிரியை. பூசை, ஓமம், தியானம் ஆகிய மூன்றற்கும் அகத்தே மூன்று இடம் வகுத்துக்கொண்டு செய்யப்படும் அந்தரியாகம் கிரியையில் யோகம் எனப்படும். அந்தரியாக உரைப்பால் உளதாகும் அனுபவ உணர்வு கிரியையில் ஞானமாகும். இனி இயமம், நியமம், ஆசனம், புராணாயாமம் என்னும் நான்கும் யோகத்தில் சரியையாம். பிரத்தியாகாரம், தாரணை ஆகியவை யோகத்தில் கிரியையாகும். தியானம் யோகத்தில் யோகம் எனப்படும். சமாதியாவது யோகத்தில் ஞானம். இந்த யோகம் தானும் சகலம், சகல நிட்களங்களைப் பற்றி நின்று செய்யப்படும் சாலம்ப யோகம் என்றும், நிட்களத்தைப்பற்றி நின்று செய்யும் நிராலம்ப யோகம் என்றும் இருவகைப்படும். இவை சிவாகமங்களில் விரிவாகக் கூறப்படுகின்றன. கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்ற நான்கனுள் கேட்டல் ஞானத்தின் சரியையாகும். சிந்தித்தல் ஞானத்தில் கிரியை எனப்படும். தெளிதல் ஞானத்தில் யோகமாகும். நிட்டை கூடல் ஞானத்தில் ஞானம் எனப்படும். இச்சரியை முதலிய நான்கும் உபாயச் சரியை எனவும், உண்மைச் சரியை எனவும், ஒவ்வொன்றும் நந்நான்காகவும் விரியும் என உணர்க. சரியை முதலிய நான்கும் அரும்பு, மலர், காய் கனியாதல் போலச் சோபான முறையாகிய தம்முள் வேறுபாட்டால் முறையே ஒன்றற்கொன்று அதிகமாய் நான்காம் என்னும் முறைமைக் கண் நின்ற ஞானமே முடிபாகிய ஞானமாம் எனவும், எனவே இந்நான்கினும் அறிவு நுணுகி வரவர அறியாமையாகிய மலமும் அம்முறையே தேய்ந்து தேய்ந்து வருதலின் அவற்றின் பயனாகிய சாலோகம் முதலிய நான்கும் முத்தியாம் எனவும், ஆயினும் அம்மல நீக்கமும் அவ்வாறு நிகழும் சோபான முறையாலே அவை ஒன்றற்கொன்று ஏற்றமாய் அவற்றுள் நான்காம் என்னும் முறைமைக்கண் நின்ற சாயுச்சியம் ஒன்றே முடிவாகிய முத்தியாம் எனவும் உணர்ந்து கொள்க எனச் சிவஞானமாபாடியம் (8 : 1) முதலநிகரணத்துள் கூறுகிறது. சிவாகம நெறி சித்தாந்தம் எனவும் உபநிடதங்களும் பிரம சூத்திர சங்கர பாடியமும் வேதாந்தம் எனப்படும். ஆறந்தங்களாவன: சித்தாந்தம் வேதாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம் என்பனவாம். இவற்றின் விரிவுரைகளைத் தத்துவ பிரகாசிகை, சிவஞான பாடியம், சிவாக்கிரமணி திபிகை முதலிய நூல்களில் உணரப்படும். இவற்றின் ஞானக் கிரியைகளால் பெறப்படும் சிவத் தியானுபவம் பெருமை மிக வுடையதாதலால் அதனை, “பெரிய சிவ அனுபவம்” என்றும், அதன்பயனாகப் பெறலாவது சமரச சன்மார்க்கம் என்றும் தெரிவிப்பதற்கு, “பெரிய சிவானுபவத்தால் சமரச சன்மார்க்கம் பெற்றேன்” என்றும், அதனால் தனக்குச் சாகா நிலைமை உளதாயிற்று என்பாளாய், “இங்கு இறவாமையுற்றேன் காண் தோழி” என்றும் தலைவி இயம்புகின்றாள். (93)
|