5810. அருட்சோதித் தலைவர்எனக் கன்புடைய கணவர்
அழகியபொன் மேனியைநான் தழுவிநின்ற தருணம்
இருட்சாதித் தத்துவங்கள் எல்லாம்போ யினவால்
எங்கணும்பேர் ஒளிமயமாய் இருந்தனஆங் கவர்தாம்
மருட்சாதி நீக்கிஎனைப் புணர்ந்தஒரு தருணம்
மன்னுசிவா னந்தமயம் ஆகிநிறை வுற்றேன்
தெருட்சார்பில் இருந்தோங்கு சமரசசன் மார்க்கத்
திருச்சபைக்கண் உற்றேன்என் திருக்கணவர் உடனே.
உரை: தோழி! அருட் சோதியை யுடைய தலைவரும், எனக்கு அன்புடைய கணவருமாகிய சிவனுடைய அழகிய பொன்னிற மேனியை நான் கூடியிருந்த காலத்தில் இருட் சாதியாகிய மாயையோடு கலந்த தத்துவக் கூறுகள் எல்லாம் என்னைவிட்டு நீங்கின; எங்கும் பெரிய ஒளி மயமாய் இருந்தன; அவ்விடத்தே மருளும் இயல்புடைய மக்களிடத்திலிருந்து அவர் என்னைக் கூடிய ஒப்பற்ற தருணத்தில் நான் நிலைபெற்ற சிவானந்த மயமாய் நிறைந்து விளங்கினேன்; தெளிந்த ஞானவான்கள் பக்கல் இருந்து உயர்ந்த சமரச சன்மார்க்க சபையின்கண் நான் என் சிறப்புடைய கணவராகிய சிவபெருமானுடன் புகுந்தடைந்தேன். எ.று.
சோதியாயினும் அருள் மயமானது என்றற்குச் சிவனது பெருஞ் சோதியை, “அருட்சோதி” என்று புகழ்கின்றாள். “பொன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி” என்று சான்றோர் புகழ்வதால் சிவன் திருமேனியை, “அழகிய பொன் மேனி” என்று போற்றுகின்றாள். தத்துவங்கள் யாவும் மாயா சம்பந்தம் உடையனவாதலால் அத்தத்துவங்கள் அனைத்தையும், “இருட் சாதித் தத்துவங்கள்” என்று இகழ்கின்றாள். மாயா சம்பந்தம் அற்ற வழி எங்கும் சிவவொளியே திகழும் என்பாளாய், “எங்கணும் பேரொளி மயமாய் இருந்தன” என்றும், மலப் பிணிப்பால் மக்களினம் மருளும் இயல்பினவாதலால் அதனின்றும் தன்னை நீக்கிய அருட் செயல் நிகழ்ந்த காலத்தை, “மருட் சாதி நீக்கி எனைப் புணர்ந்த ஒரு தருணம்” என்றும், அக்காலை தான் இருந்த ஆனந்த நிலையை, “மன்னு சிவானந்த மயமாகி நிறைவுற்றேன்” என்றும் புகல்கின்றாள். தெருட் சார்பு - தெளிந்த ஞானவான்கள் இருந்தருளும் கூட்டம். ஞானவான்களின் திருக்கூட்டம் சமரச சன்மார்க்க அருட்சபை என்று புகழ்பவளாய், “தெருட் சார்பில் இருந்து ஓங்கும் சமரச சன்மார்க்கத் திருச்சபை” என்று சிறப்பிக்கின்றாள். (97)
|