5812. தாயினும்பேர் அருளுடையார் என்னுயிரில் கலந்த
தனித்தலைவர் நான்செய்பெருந் தவத்தாலே கிடைத்தார்
வாயினும்ஓர் மனத்தினும்மா மதியினும்எத் திறத்தும்
மதித்தளத்தற் கருந்துரிய மன்றில்நடம் புரிவார்
ஆயினும்என் அளவின்மிக எளியர்என என்னை
அகம்புணர்ந்தார் புறம்புணர்ந்தார் புறப்புணர்ச்சித் தருணம்
தூயஒளி பெற்றழியா தோங்குவடி வானேன்
சுகமயமாம் அகப்புணர்ச்சி சொல்லுவதெப் படியோ.
உரை: தோழி! பெற்ற தாயினும் மிக்க அருளுடையவரும், என்னுடைய உயிரில் கலந்து கொண்ட தலைவரும், நான் செய்த பெரிய தவத்தின் பயனாகப் பெறப்பட்டவரும், சொல்லுக்கும் மனத்துக்கும் பெரிய நுண்ணறிவுக்கும் எல்லாவற்றாலும் அறிந்தளந்து காண்பதற்கு அரிதாகிய துரிய நிலையாகிய அம்பலத்தில் நடிப்பவருமாகிய சிவ பெருமான் எத்துணை அரியராயினும் என்னளவில் மிகவும் எளியவராய் என்னை அகத்திலும் புறத்திலும் கூடி இன்பம் செய்தார்; உருவாய் எனக்குப் புறப்புணர்ச்சி இன்பத்தை அவர் தந்த சமயத்தில் நான் தூய ஒளி பெற்று உயர்ந்த ஒளி வடிவாயினேன்; இன்ப மயமாய் அவர் தந்த அகப்புணர்ச்சியை நான் சொல்வதென்பது எவ்வண்ணமாம். எ.று.
எத்தகைய தலைவரும் உயிரோடு உயிராய் ஒன்றிக் கலத்தல் இல்லாமைபற்றிச் சிவபெருமானை, “என் உயிரிற் கலந்த தனித்தலைவர்” என்று ஏத்துகின்றாள். தவத்தாலன்றி வேறு எவ்வாற்றாலும் பெறலரியர் என்பது பற்றி, “நான் செய் பெருந் தவத்தாலே கிடைத்தார்” என்று பேசுகின்றாள். வாயாலும் மனத்தாலும் இயற்கை மதிநலத்தாலும் அப்பிறமேயன் எனச் சிவாகமங்கள் கூறுதலால், “எத்திறத்தும் மதித்து அளத்தற் கரியவன்” என்று குறிக்கின்றாள். துரியத்தானமாகிய ஞான நிலையத்தில் சிவம் காட்சி தருவது விளங்க, “துரிய மன்றில் நடம் புரிவார்” என்று சொல்லுகின்றாள். எங்கும் எல்லாவற்றிலும் பரந்து விரிந்து பெரிதாகிய பரம்பொருள் தனக்கு அருள் செய்தமை புலப்பட, “என் அளவில் மிக எளியர்” என இயம்புகின்றாள். நுண்ணிய அகப் புணர்ச்சியையும் தூலமான புறப்புணர்ச்சியையும் தமக்கு அளித்தருளிய நிலையை, “அகம் புணர்ந்தார் புறம் புணர்ந்தார்” என்று உரைக்கின்றாளாதலின், புறப்புணர்ச்சியை விதந்தோதலுற்று, “புறப்புணர்ச்சித் தருணம் தூய ஒளி பெற்று” என்றும், அதுவதுவாய்க் கலந்து மறைந்தொழியாது இன்ப வடிவாய் இருந்தமை தோன்ற, “தூய ஒளி பெற்று அழியாது ஓங்கு வடிவானேன்” என்றும் மொழிகின்றாள். அகப் புணர்ச்சியில் பெற்ற இன்பத்தை உரைக்க மாட்டாமை புலப்பட, “சுக மயமாய் அகப்புணர்ச்சி சொல்லுவது எப்படியோ” என்று வினவுகின்றாள். (99)
|