583. நிலத்தே சிறுவர்செய் குற்றங்கள்
யாவும் நினைத்தறவோர்
சலத்தே உளத்தை விடார்என்பர்
ஆதலின் தாதையென்றே
குலத்தேவர் போற்றும் குணக்குன்ற
மேஎங் குலதெய்வமே
புலத்தே இழிதகை யேன்பிழை
யாவும் பொறுத்தருளே.
உரை: தேவர்களின் கூட்டம் எங்கள் தந்தையே யெனப் போற்றிப் பரவும் குணக்குன்றமே, எங்கள் குலத்தவர் பலரும் வழிபடும் பர தெய்வமே, நிலவுலகில் வாழும் அறவோர் சிறுவர்கள் செய்கிற பிழை யனைத்தையும் மனத்திற்கொண்டு, உள்ளத்தில் பிடிவாத குணம் நுழைய விடார்; ஐம்புல ஆசைகளால் இழிந்த தன்மை யெய்திய என்னுடைய குற்றங்கள் யாவற்றையும் பொறுத்தருள்க. எ.று.
“குலத்தேவர்” என்பதைத் தேவர் குலம் என மாற்றிக் கொள்க. குலம் - கூட்டம். பர தெய்வம் - மேலான தெய்வம். எந்தை தந்தை மூத்தப்பன் என எம் குலத்தோர் அனைவரும் போற்றும் தெய்வம் நீயே என்பார் ‘எம்குல தெய்வமே’ என்றார். புலத்தே யிழி தகையேன் - ஐம்புலன்கள் மேற்செலுத்தும் ஆசை வழி யுழலும் இழிந்த தன்மை யுடையேன். பிழை பொறுப்பதைக் கடனாக யுடையன் இறைவன் என்பதை உணர்ந்திருத்தலின் “பிழை யாவும் பொறுத்தருள்” என வேண்டுகிறார். “யாவும்” என்பது எஞ்சாமை யுணர்த்தி நின்றது. குற்றம் புரிவோர் சிறியவராயினும் பொறாது சினப்பவர் பலராதலின், அவற்றை மனங் கொள்ளாத சிலராகிய உயர்ந்தவர்களை, “அறவோர்” என்கின்றார். சலம் - பிடிவாதம்; வஞ்சனையுமாம். குற்றங்களை நினைத்த விடத்துச் சினமும் சிறுமையாகிய சலமும் நெஞ்சில் இடம் பெறுதலின் “அறவோர் நினைத்துச் சலத்தே உளத்தை விடார்” என்று கூறுகின்றார். தாதை - தந்தை. நிலத்துறையும் அறவோர்க்கே இந்த நல்லியல்பு என்றால், எல்லா நிலத்துக்கும் மேற்பட்ட முத்திநிலத்தே பேரறவோனாய்ப் பிறங்கும் நின் திருவுள்ளத்தின் இயல்பை யான் எடுத்தியம்பவும் வேண்டுமோ என்ற கருத்தால் “நிலத்தே” என எடுத்து மொழிகின்றார்.
இதனால், திருவுள்ளத்திற் சலம் கொள்ளாது செய்த பிழை யனைத்தும் பொறுத்தருள்க என வேண்டிக் கொண்டவாறாம். (3)
|