பக்கம் எண் :

587.

     வையகத் தேஇடர் மாக்கடல்
          மூழ்கி வருந்துகின்ற
     பொய்யகத் தேனைப் புரந்தரு
          ளாமல் புறம்பொழித்தால்
     நையகத் தேன்எது செய்வேன்அந்
          தோஉள் நலிகுவன்காண்
     மெய்யகத் தேநின் றொளிர்தரும்
          ஞான விரிசுடரே.

உரை:

     மெய்ம்மையாளர் மனத்தின்கண் நின்று, ஒளி செய்யும் ஞானச்சுடரே, மண்ணுலகில் துன்பமாகிய பெரிய கடலில் ஆழ்ந்து வருந்துகின்ற பொய்யனாகிய என்னைக் காத்தருளாமல் கைவிட்டால், சிறுமையுடைய யான் யாதும் செய்யமாட்டாமல் மனநோய் மிகுந்து கெடுவேன். எ. று.

     மண்ணுலகில் மிக்க பெரும் துன்பத்தில் வீழ்ந்து வருந்துவதற்குக் காரணம் பொய்ந்நினைவும், பொய்ம்மொழியும், பொய்ச்செய்கையும் காரணமாதலின், “வையகத்தே இடர் மாக்கடல் மூழ்கி வருந்துகின்ற பொய்யகத்தேன்” என்று புகல்கின்றார். பொய்யாய உலகின்கண் பொய்த்தலின்றி வாழ்தலின் அருமையை நன்கறிந்தவன் ஆதலின், இறைவன் அவர்களையும் கைவிடாமல் காத்துத் திருத்தும் இயல்பினன் என்பதுபற்றித் தன்னைக் கைவிடான் என்ற உறுதிப்பாட்டால், “பொய்யகத் தேனைப் புரந்தருளாமல் புறம்பொழித்தால்” என உரைக்கின்றார். புரந்தருளல் - காத்தருளுதல். புறம்பொழித்தல் - புறத்தே போகுமாறு செலுத்துதல். கடல்நீர் கொதித்தால் வேறு தண்ணீர் கொண்டு அதனைத் தணிக்கலாகாதவாறுபோல இறைவன் திருவுள்ளத்தில் வெறுப்புத் தோன்றினால், அதனை மாற்றும் செய்கை உயர்நிலைத் தேவர்கட்கும் ஒல்லாதாகலின், தனது சிறுமையால் மனம் நொந்து செய்வதொன்றும் இன்மை புலப்பட, “நையகத்தேன் எது செய்வேன் அந்தோ” என்றும், நான் செய்யக்கூடியதொன்றும் இல்லை என்பார், “உள்நலிகுவன் காண்” என்றும் இயம்புகின்றார். மெய் யுணர்வுடையோர் உள்ளத்தில் ஞான மயமாய் ஒளி செய்தலின், “மெய்யகத்தே நின்றொளிர்தரும் ஞான விரிசுடரே” என உரைக்கின்றார். திருநாவுக்கரசர், “மெய்கிளரும் ஞான விளக்குக் கண்டாய்” (மறைக) என உரைப்பது காண்க.

     இதனால், இறைவன் அருளால் புறம் பொழித்தால் உயிர்கட்கு உய்தியில்லை என்பது தெரிவித்தவாறாம்.

     (7)