பக்கம் எண் :

589.

     உண்டோஎன் போல்துய ரால்அலை
          கின்றவர் உத்தமநீ
     கண்டோர் சிறிதும் இரங்குகி
          லாய்இக் கடையவனேன்
     பண்டோர் துணைஅறி யேன்நின்னை
          யன்றிநிற் பற்றிநின்றேன்
     எண்டோள் மணிமிடற் றெந்தாய்
          கருணை இருங்கடலே.

உரை:

     உத்தமனே, எட்டுத் தோளும் மணிமிடறும் உடைய எந்தையே, கருணையாகிய பெரிய கடலே, கடையவனாகிய யான் எனக்குத் துணையாவார் உன்னைத் தவிர வேறு ஒருவரையும் முன்பறியேன்; இப்பொழுது நின்னையே துணையாகப் பற்றி நிற்கின்றேன்; மேலும் என்போல் துன்பத்தால் வருந்துபவர் வேறு யாவர் உளர்? அது கண்டும் நீ சிறிதும் மனம் இரங்குகின்றாய் இல்லையே, இரங்கியருள்க. எ. று.

     சிவனது சகளத் திருமேனியில் எட்டுத் தோள்களும் முக்கண்ணும் காணப்படுதலால், “எண்டோள் மணிமிடற்று எந்தாய்” என்கிறார். “எண்டோள் வீசி நின்றாடும் பிரான் தன்னைக் கண்காள் காண்மின்களோ” (அங்க) என்று திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. மணிமிடறு - நஞ்சுண்டதனால் நீலமணியின் நிறங்கொண்டு விளங்கும் கழுத்து. அறிவறியாமையால் கடையவனாய்க் கீழ்ப்பட்டிருந்த காலத்துத் தெய்வமுண் டென்பதோர் சிந்தையின்றி இருந்த காலையில் நீயே உயிர்கட்கு ஒப்பற்ற துணை யென்பது அறியாதிருந்தேன் என்பார், “கடையவனேன் பண்டோர் துணையறியேன்” என்று தனது வரலாற்றைக் குறிக்கின்றார். ஓரளவு அறிவறிந்தபின் சிவனையன்றித் துணையாம் தெய்வம் வேறில்லை என்பதறிந்து விடாப்பிடியாய்ப் பற்றிக் கொண்டமை விளங்க, “நின்னையன்றி ஓர் துணையறியேன் நிற்பற்றி நின்றேன்” என்றும், எல்லாம் அறிபவனாகிய நீ நான் படுகின்ற துன்பமனைத்தும் நன்கறிந்தும் இரங்குகின்றா யில்லையே, இது கருணைப் பெருங்கடலாகவுள்ள உனக்குப் பொருந்தாது என்பார். “கருணைப் பெருங்கடலே நீ கண்டு ஓர் சிறிதும் இரங்குகிலாய்” என்றும் கூறுகின்றார். தாம் உற்று வருந்தும் வருத்தத்தின் மிகுதி புலப்பட, “உண்டோ என் போல் துயரால் அலைகின்றவர்” எனவும், நீ துன்பத்தின் கொடுமை அறியாதவன் என்றற்கு, “உத்தம” எனவும் உரைக்கின்றார்.

     இதனால், என் துயர் கண்டும் இரங்காதிருப்பது நன்றன்று என முறையிட்டவாறாம்.

     (9)