590. கடலே அனைய துயர்மிகை
யால்உட் கலங்கும்என்னை
விடலே அருளன் றெடுத்தாளல்
வேண்டும்என் விண்ணப்பம்
தடல்ஏ றுவந்த அருட்கட
லேஅணி அம்பலத்துள்
உடலே மருவும் உயிர்போல்
நிறைஒற்றி யூரப்பனே.
உரை: வலி மிக்க எருதினை விரும்பி ஊர்ந்தருளும் அருட் கடலே, அழகிய அம்பலத்தின்கண் உடலிற் கலந்துறையும் உயிர்போல் நிறைந்து விளங்கும் திருவொற்றியூர் முதல்வனே, கடல்போல் மிக்கு வருத்தும் துன்பத்தால் மனம் கலங்கும் என்னைக் கைவிடுவது அருட் செயலாகாது காண்; கை கொடுத்துதவி ஆட்கொள்ளல் வேண்டும்; எளியேனது விண்ணப்பம் இதுவாகும். எ. று.
அடல் ஏறு - வலி மிகுதியால் பகையை வெல்லும் எருது. “ஊர்தி வால் வெள்ளேறு” (புறம்) என்று பெரியோர் கூறுவதால், “அடல் ஏறு உவந்த அருட்கடலே” என்கின்றார். ஊர்தி அடல் வல்ல ஏறாயினும் ஊர்கின்ற பெருமான் பேரருளாளன் என்பது புலப்பட, “அருட் கடலே” என விதந்துரைக்கின்றார். அம்பலத்துள் நிறைகின்ற ஒற்றியூரப்பனே என்பது, “உளங்கொள்வார் உச்சியார் கச்சி ஏகம்பன் ஒற்றியூர் உறையும் அண்ணாமலை யண்ணல்” (இலம்பை) என்று ஞான சம்பந்தர் கூறுவதுபோல, அம்பலத் தாடுபவனும் ஒற்றியூரில் உறைபவனும் ஈசன் ஒருவனே என்ற கருத்துணர நின்றது. உடலில் உயிர்போல் இறைவன் உயிர்களிடத்து ஒன்றாயும் வேறாயும் உடனாயும் இருப்பதுபற்றி, “உடலே மருவும் உயிர்போல் நிறை வொற்றியூரப்பனே” என வுரைக்கின்றார். கலப்பால் ஒன்றாகவும், பொருட்டன்மையால் வேறாகவும், உயிர்க்குயிராம் தன்மையால் உடனாயும் இருக்கிறான் என அறவோர் கூறுவர் (சிவ. போ.). சுடச்சுடரும் பொன்போல் துன்பங்களால் உயிர் தூய்மை யுற்று ஒளி திகழுமாயினும் மிகு வெப்பத்தால் பொன் நீராயுருகிக் கலங்குவது போலக் கடல்போல் பெருகி வரும் துன்பங்களால் உயிர் கலக்கமுறுதலின், “கடலே யனைய துயர் மிகையால் உட்கலங்கும் என்னை விடல் அருளன்று” என முறையிடுகின்றார். விடல் - கைவிடுதல். நீர்க்குள் ஆழ்பவனைக் கை கொடுத்துத் தூக்குவதுபோல் துன்பத்தில் ஆழ்கின்ற என்னையும் அருள் புரிந்தாளுதல் வேண்டும் என விண்ணப்பிப்பார். “எடுத்தாளல் வேண்டும் என் விண்ணப்பம் ஈது” என விளம்புகின்றார்.
இதனால், துன்ப மிகுதியால் கலங்குகின்ற எனக்கு அருளொளி தந்து ஆண்டருளவேண்டும் என்று விண்ணப்பித்தவாறாம். (10)
|