பக்கம் எண் :

592.

     உண்மை அறியேன் எனினும்எனை
          உடையாய் உனையே ஒவ்வொருகால்
     எண்மை உடையேன் நினைக்கின்றேன்
          என்னே உன்னை ஏத்தாத
     வெண்மை உடையார் சார்பாக
          விட்டாய் அந்தோ வினையேனை
     வண்மை உடையாய் என்செய்கேன்
          மற்றோர் துணைஇங் கறியேனே.

உரை:

     என்னை யுடையவனே, வளமெல்லாம் உடையவனே, எளிமைப் பண்புடையவனாதலால் மெய்ப்பொருளாகிய உன்னை உணரா தொழிவேனாயினும் ஓரொரு காலத்தில் உன்னையே நினைக்கின்றேன்; எனினும் வினை பலவுடைய என்னை, உன்னை வழிபடுவதில்லாத புல்லறிவாளர் கூட்டத்தில் சேர்ந்து வாழ விட்டுவிட்டாய்; வேறே நல்லறிவாளர் துணையைப் பெறுகின்றேனில்லையே. யான் என்ன செய்வேன்? எ.று.

     வன்மை - வளம் பலவும் உடைமை; கொடைத்தன்மை எனினும் அமையும். உள்ளதன் உண்மை யறியும் அறிவு சிறிதுடையேனாயினும் மெய்ம்மைப் பொருளாகிய உன்னைத் தெளிய உணர்கிலேன் என்பார், “உண்மை யறியேன் எனினும்” என்றும், என்றாலும் உள்ள என் சிற்றறிவால் ஓரொரு சமயத்தில் உனது உண்மை ஒளியைக் கண்டு சிந்திப்பதுடையேன் என்பாராய், “உனையே ஒவ்வொருகால் நினைக்கின்றேன்” என்றும் உரைக்கின்றார். எண்மை, ஈண்டு அறிவின் சிறுமை மேற்று. எப்பொழுதும் நினையாது ஓரொரு சமயத்தில் நினைப்பதற்குக் காரணம் எனது அறிவின் சிறுமையே என்பது யாப்புறுத்தற்கு “எண்மை யுடையேன்” என்கின்றார். வெண்மை யுடையார் - புல்லறிவாளர்; சிறிது கற்றுப் பெரிது கற்றவர் போலத் தருக்குவார். ஒருகால் வழிபட்டு முக்காலும் வழிபடும் இயல்பினேன் எனத் தருக்குவதும் வெண்மையாகலின், அதனை நீக்குதற்கு, “உன்னை எக்காலும் ஏத்தாத வெண்மையுடையார்” என விளக்குகிறார். சார்பு, ஈண்டு தொடர்பின் மேல் நின்றது. அவர் தொடர்பு இறைவனை அறவே மறத்தற்கு ஏதுவாதலின் “வெண்மையுடையார் சார்பாக விட்டாய்” என்பதோடு, ‘அந்தோ’ என இரங்குகின்றார். தொடர்பாயினார் உன்னை ஏத்தாத வெண்மையுடையார் என உணர்ந்த பின்னரும் யான் விலகா தொழிந்தமைக்குக் காரணம் வேறு துணை காணேனாயினேன் என்பாராய், “மற்றோர் துணையிங் கறியேன்” என்றும், அதனால் வருத்தம் மிகுந்து “என் செய்கேன்” என்றும் கூறுகின்றார். வேறு துணை காணாமைக்கும் புல்லறிவாளர் துணை எய்தினமைக்கும் காரணம் முன்னை வினை என்றற்கு “வினையேன்” என விளம்புகிறார்.

     இதனால், இறைவனை ஏத்தாதார் தொடர்பு உண்டாயினமைக்கு வருந்துவது தெரிவித்தவாறாம்.

     (2)