பக்கம் எண் :

593.

     எளியேன் இழைத்த பெரும்பிழைகள்
          எல்லாம் பொறுத்திங் கின்பளித்தாய்
     களியேன் தனைநீ இனிஅந்தோ
          கைவிட் டிடில்என் கடவேனே
     ஒளியே முக்கட் செழுங்கரும்பே
          ஒன்றே அன்பர் உறவேநல்
     அளியே பரம வெளியேஎன்
          ஐயா அரசே ஆரமுதே.

உரை:

     ஒளிப்பொருளே, மூன்றாகிய கண்களையுடைய செழுமையான கரும்பு போல்பவனே, ஒன்றாகிய பரம்பொருளே, மெய்யன்பர்க்கு உறவாயவனே, அருளுருவே, மேலான வெளியே, எனக்கு ஐயனே, அரிய அமுதமே, எளியவனாகிய யான் செய்த குற்றமெல்லாம் பொறுத்து இவ்வுலகில் எனக்கு இன்பமளித்தாய்; அதனால் களிப்புற்று மயங்குகின்ற என்னை இப்பொழுது கைவிடுவாயாகில் யான் யாது செய்வேன்? எ.று.

     உலப்பில்லாத ஒளியாக விளங்குதல்பற்றி இறைவனை, “ஒளியே” என்கிறார். முக்கட் கரும்பு, மூன்று கணுக்களையுடைய கரும்பு என்றும் பொருள்படும். பரம்பொருளாம் தன்மையில் ஒன்றேயாதலின் ஒன்று என்று உரைக்கின்றார். “ஒன்றென்பது ஒன்றேகாண் ஒன்றே பதி” என்பது சிவஞான போதம். அன்பராயினவர்க்கு உறவினர்போல் உற்றுழிப் பேருதவி புரிதலின், “அன்பர் உறவே” எனவும், இன்பமே பெருக அளிப்பது பற்றி, “நல்லளி” எனவும், மாயா காரியமாகிய பூத வெளிக்கு மேலாய் மாயாதீதப் பெருவெளியாய்ப் பிறங்குதலின், “பரம வெளி” எனவும் புகல்கின்றார். பிழை செய்தற்குரிய அறிவுச் செயல்களில் மிக எளியன் என்பாராய், “எளியேன்” எனவும், எளிமையால் செய்த பிழைகள் பொறுத்தற்கரியவாய்ப் பலவாய்த் துன்பப் பேற்றிற்கே ஏதுவாவன என்பார், “எளியேன் இழைத்த பெரும்பிழைகள் எல்லாம்” எனவும், பேரருளால் அத்தனையும் பொறுத்ததோடு இன்ப வாழ்வும் அளித்துள்ளாய் என்பார், “பொறுத்திங்கு இன்பளித்தாய்” எனவும் கூறுகின்றார். இங்கெனக்கு எய்திய இவ்வின்பத்தால் யான் நினது இன்னருளை மறந்து தவறு பல செய்தலும் கூடும்; அவற்றைப் பொறுத்து என்னைக் கைவிடாது அருளவேண்டும் என வேண்டுவாராய், “களியேன் தனைநீ இனி அந்தோ கைவிட்டிடில்” என்றும், கை விடுவாயாயின் யான் முற்றக் கெடுவதன்றி வேறு செய்திறன் இலனாவேன் என்பார். “கைவிட்டிடில் என் கடவேன்” என்றும் இயம்புகின்றார்.

     இதனால், உலகியல் வாழ்வில் இன்பக் களிப்பால் பிழை செய்வேனாயினும் பொறுத்தல் வேண்டும் என விண்ணப்பித்தவாறாம்.

     (3)