பக்கம் எண் :

594.

     காமக் கடலில் படிந்தஞராம்
          கடலில் விழுந்தேன் கரைகாணேன்
     ஏமக் கொடுங்கூற் றெனும் மகரம்
          யாது செயுமோ என்செய்கேன்
     நாமக் கவலை ஒழித்துன்றாள்
          நண்ணும் அவர்பால் நண்ணுவித்தே
     தாமக் கடிப்பூஞ் சடையாய் உன்
          தன்சீர் பாடத் தருவாயே.

உரை:

     மணம் கமழும் பூமாலை யணிந்த சடையை யுடைய பெருமானே, காம வேட்கை என்னும் கடலில் மூழ்கியதால் துன்பமாகிய பெருங்கடலில் ஆழ்ந்து கரைகாணாமல் அலைகின்ற யான் மயக்கந்தரும் கொடிய எமன் என்னும் சுறா மீன் என்னைப்பற்றி யாது செய்யுமோ என அஞ்சுகிறேன்; அச்சம் நல்கும் அக் கவலையை நீக்கி உனது திருவடியைச் சேரும் நல்லவர் கூட்டத்தில் என்னைச் சேர்த்து உனது புகழ் பாடும் நலத்தை எனக்கு அருளுக. எ.று.

     தாமம் - மாலை, கடிப்பூ - நறுமணங் கமழும் பூ. முற்றவும் கடியப்படும் குற்றமன்று என்பதுபற்றிக் காமக் கடலில் படிதற்குக் காரணம் கூறாராயினார். காமக்கடலில் இறப்ப மூழ்கினார்க்குத் துன்பம் ஒழியாது வருதலின், “அஞராம் கடலில் விழுந்தேன்” என்கிறார். அஞர் - துன்பம். காம வின்பம், கடல் போல்வதாகலின் அதனால் வருகின்ற துன்பம் கடலினும் பெரிதாக வுணரப்படுதலின், “கரை காணேன்” என வருந்துகிறார். “இன்பம் கடல் மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது” (குறள்) என்று சான்றோர் கூறுதல் காண்க. உணர்வைக் கொன்று உயிரைக் கவர்தலின் எமனை, “ஏமக் கொடுங் கூற்று” என்கின்றார். மகரம் - சுறா மீன். கடலில் நீந்துவோரை கையையோ காலையோ பற்றி ஈர்த்து உண்ணும் கொடுமை யுடைத்தாதலின் “மகரம் யாது செய்யுமோ” எனவும், அதனால் பற்றப்பட்டார் இரையாவதல்லது மீள்வதரிதாதலின், “என் செய்கேன்” எனவும் புலம்புகிறார். ஏனை அவலக் கவலைகள் போலின்றி இறப்புக் கவலை மிக்க அச்சத்தை விளைவித்தலின், “நாமக் கவலை” எனவுரைக்கின்றார். இறைவன் திருவடியே சிந்திக்கும் சிவஞானிகளைத் “தாள் நண்ணும் அவர்” என்றும், தம்மைச் சேர்ந்தாரையும் தம்மைப்போல் இறைவன் திருவடியைச் சிந்திக்கவும் அவன் திருப்புகழைப் பாடவும் செயவராதலின், “தாள் நண்ணுமவர்பால் நண்ணுவித்து உன்றன் சீர் பாடத் தருவாயே” என்று வேண்டுகிறார். “தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது” (குறள்) எனத் திருவள்ளுவர் தெரிவிப்பது காண்க.

     இதனால், இறப்பால் வரும் கவலை ஒழிய மெய்யன்பர் கூட்டத்தில் சேர்த்தருள்க என விண்ணப்பித்தவாறாம்.

     (4)