597. கண்ணார் நுதலோய் பெருங்கருணைக்
கடலோய் கங்கை மதிச்சடையோய்
பெண்ணார் இடத்தோய் யாவர்கட்கும்
பெரியோய் கரியோன் பிரமனொடும்
அண்ணா எனநின் றேத்தெடுப்ப
அமர்ந்தோய் நின்றன் அடிமலரை
எண்ணா துழல்வோர் சார்பாக
இருக்கத் தரியேன் எளியேனே.
உரை: கண் பொருந்திய நெற்றியும் கங்கையும் பிறைத்திங்களும் தங்கிய சடைமுடியும் பெண்பொருந்திய இடப்பாகமும் உடையவனே, பெரிய கருணைக் கடலாயவனே, எத்தகையோர்க்கும் பெரியவனே, திருமாலும் பிரமனும் அண்ணா என்று முன்னின்று பரவி வழிபட விளங்குபவனே, நினது திருவடியாகிய மலர்களை நினையாமல் துயருற்று வருந்துவோருடைய கூட்டத்தில் எளியவனாகிய யான் இருக்க மாட்டாதவனாகின்றேன்; ஆகவே என்னை அவர்கள் கூட்டத்தில் சேர விடாது காத்தருள்க. எ.று.
கண்ணார் நுதலோய் எனக் கண்ணை விதந்தெடுத்துக் கூறினமையின் அக் கண்ணிற் கணிகலமாய கருணையின் கடல் போன்றவன் இறைவன் என்றற்குப் “பெருங் கருணைக் கடலே” எனப் பரவுகின்றார். பெருங்கருணைக்கடல் என்பதை கருணைப் பெருங்கடல் என மாறிக் கருணையாம் பெருங் கடலாயவன் எனினும் அமையும். உமையொரு பாகம் அமைந்த மேனியனாதலின், “பெண்ணார் இடத்தோய்” எனப் போற்றுகின்றார். உயிர்த் தொகையின் உயர்ந்த மக்கள் தேவராகிய இரு திறத்தாருள் யாவர்க்கும் பெருமையால் மிக்கவன் என்பது விளங்க “யாவர்கட்கும் பெரியோய்” என இயம்புகின்றார். அண்ணன் - தலைவன். திருமால் முதலியோர் ஏத்தெடுப்பச் சிவபெருமான் தான் இனிதிருந்து அவர்பால் அன்பு செய்தொழுகுகிறான் என்பாராய், “ஏத்தெடுப்ப அமர்ந்தோய்” எனப் புகல்கின்றார். இறைவன் திருவடியை நினையாதவர் மனக்கவலை மாற்றுதலின்றி இடும்பையுற்று வருந்துவர் எனத் திருவள்ளுவர் முதலிய பெரியோர் கூறுதலால், அவர்களை, “நின்றன் அடிமலரை எண்ணாது உழல்வோர்” என்று குறிப்பிட்டு, அவர் கூட்டத்தில் தன்னைச் சாரவிடல் ஆகாது; அவருடைய சார்பு தமக்குத் தாங்குதற்கரிய துன்பச் சுமையாம் என்பார், “சார்பாக இருக்கத் தரியேன் எளியேன்” என்று முறையிடுகின்றார். இன்பத்தைப் போலத் துன்பத்தைத் தாங்கும் மதுகையிலேன் என்பது புலப்பட “எளியேன்” என இசைக்கின்றார். ஆகவே என்பது முதலாயின குறிப்பெச்சம்.
இதனால், இறைவன் நற்றாள் தொழாதார் கூட்டத்தை விரும்பாமை தெரிவித்தவாறாம். (7)
|