பக்கம் எண் :

4. சிறு விண்ணப்பம்

    அஃதாவது, சிறுமை நிலையை விளைவிக்கும் குணஞ் செயல்களை எடுத்துரைத்து இறைவன்பால் முறையிடுதல். இதன்கண் மனம் தூய்மை யில்லாமையும், ஒருமை யில்லாமையும், ஞானமும் ஒழுக்கமும் இல்லாமையும், மூடரொடு கூடி அறிவு திரிந்தமையும், தீ வினையால் சிந்தனை மாறினமையும் எண்ணி வருந்துவது ஒருபாலாகக் காம வேட்கையால் உண்டாகும் வருத்தத்தையும் வாழ்க்கைக்கு வேண்டிய உழைப்பு வகைகளால் உண்டாகும் வருத்தத்தையும் பிழை பல செய்வதால் உளதாகும் மனச்சலிப்பையும் ஒருபால் நினைத்து மனத்தின்கண் வஞ்ச நினைவுகள் தோன்றி நிறைந்து விடுவதற்கு வருந்திக் கூறுவன காணப்படுகின்றன. சிவபெருமான் “கரவாடும் வன்னெஞ்சற் கரியான்” (கச்சி) என்று திருநாவுக்கரசர் முதலிய பெரு மக்கள் எடுத்தோதுவது கண்டு தம் மனத்தையும் கரவு எண்ணங்கள் இல்லாதவாறு தூய்மை செய்துகொள்ளும் முயற்சி மேற்கொண்டு இப் பதிகத்தைப் பாடியுள்ளார் என்பது உணரற்பாற்று. இதன்கண் ஒவ்வொரு பாட்டின் ஈறும், “அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ” என்ற தொடரை மகுடமாகக் கொண்டிருத்தல் காண்க.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

601.

     பண்ணால்உன் அருட்புகழைப் பாடு கின்றார்
          பணிகின்றார் நின்அழகைப் பார்த்துப் பார்த்துக்
     கண்ணார உளங்குளிரக் களித்தா னந்தக்
          கண்ணீர்கொண் டாடுகின்றார் கருணை வாழ்வை
     எண்ணாநின் றுனைஎந்தாய் எந்தாய் எந்தாய்
          என்கின்றார் நின்அன்பர் எல்லாம் என்றன்
     அண்ணாநான் ஒருபாவி வஞ்ச நெஞ்சால்
          அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.

உரை:

     எனக்கு அண்ணனாய் அன்பு செய்பவனே, உன்னுடைய மெய்யன்பர் பலரும் உனது அருட் புகழை இனிய பண்களால் பாடுகின்றார்கள். பலர் நின் அருளழகைப் பார்த்துப் பார்த்து வணங்கிப் போற்றுகின்றார்கள். பலர் மனங்குளிர நினைந்து கண் குளிரக் கண்டு இன்பக் கண்ணீரைச் சொரிந்து ஆடுகின்றார்கள். பலர் உயிர்கட்கு அருள் புரிந்தொழுகும் நின் வாழ்க்கையை நினைந்து உன்னை நோக்கி ‘எந்தையே எந்தையே’ என்று சொல்லுகின்றார்கள். பாவியாகிய நான் மாத்திரம் வஞ்சம் நிறைந்த மனத்துடன் அலைந்து திரிகின்றேன். ஐயோ நான் என்ன செய்வேன்? எ.று.

     அண்ணன் என்பது குடும்பத் தலைவனுக்கும் உடன்பிறந்தாருள் மூத்தவனுக்கும் வழங்குவதோர் முறைப்பெயர். அண்ணலாம் தலைமை யுடையவன் என்பது இதன் சொற்பொருள். இங்கே எல்லார்க்கும் தலைவனாய் அன்பு செய்பவன் என்னும் பொருளில் வந்துள்ளது. மெய்யன்பராயினார் சிவனுடைய திருவருட் புகழை இசையமைந்த பாட்டுக்களால் பாடி மகிழ்வதை, “உன் அருட் புகழைப் பண்ணால் பாடுகின்றார்” என்றும், திருமேனியழகைத் தங்கள் கண்களால் பார்த்துப் பணிந்து போற்றுகின்றார் என்பார் “நின்னழகைப் பார்த்துப் பார்த்துப் பணிகின்றார்” என்றும், கண்ணும் மனமும் மகிழ்ந்து உவகை மிகுந்து கூத்தாடுகின்றார் என்பார் “கண்ணார வுளங் குளிரக் களித்து ஆனந்தக் கண்ணீர் கொண்டாடுகின்றார்” என்றும் கூறுகின்றார். உயிர்கட்கும் மக்கட்கும் நீ அருள் செய்தொழுகும் உயர் பண்பை அப் பெருமக்கள் நினைந்து நினைந்து உள்ளம் உருகுகின்றார்கள் என்பாராய் “கருணை வாழ்வை எண்ணா நின்று உனை எந்தாய் எந்தாய் எந்தாய் என்கின்றார் நின்னன்பர் எல்லாம்” என்று சொல்கிறார். அன்பர்கள் செயல் அதுவாகவும் நான் நெஞ்சில் வஞ்ச நினைவுகள் நினைந்து பாவியாய் எங்கும் அலைந்து வருந்துகிறேன் என்பார் “வஞ்ச நெஞ்சால் நான் ஒருபாவி அலைகின்றேன்” என்றும், இதற்கு மாற்றுச் செயலொன்றும் காண்கிலேன் என்பாராய், “என் செய்கேன் அந்தோ அந்தோ” எனவும் வருந்துகிறார்.

     இதனால், நெஞ்சம் வஞ்ச நினைவுகளால் நிறைந்து அலைந்து வருந்துகிறேன் என முறையிட்டவாறு.

     (1)