608. வண்மைபெறு நின் அன்பர் எல்லாம் நின்னை
வந்தனைசெய் தாநந்த வயத்தே நின்றார்
பெண்மையுறும் மனத்தாலே திகைத்தேன் நின்சீர்
பேசுகிலேன் கூசுகிலேன் பேதை நானோர்
ஒண்மையிலேன் ஒழுக்கமிலேன் நன்மை என்ப
தொன்றுமிலேன் ஒதியேபோல் உற்றேன் மிக்க
அண்மையில்வந் தருள்புரிவோய் என்னேவீணில்
அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
உரை: அணிமையில் வந்தருளி மிக்க அருள் ஞானம் வழங்குபவனே, வளவிய நின்னுடைய அன்பர்கள் பலரும் நின்னை வழிபட்டு இன்ப வெள்ளத்தில் திளைக்கின்றார்களாக, பெண்மைத் தன்மை பொருந்திய மனத்தைக்கொண்டு திகைப்புற்று நின் புகழைப் பேசுவதன்றிப் பேசாமைக்குக் கூசுவதுமின்றிப் பேதையாகி யிருக்கும் நான் சிறிதும் ஒள்ளிய அறிவும் ஒழுக்கமும் நற்பண்பும் யாதுமில்லாதவனாய் ஒதி மரம்போல் வளர்ந்து வீணே அலைந்து வருந்துகிறேன், ஐயோ நான் என்ன செய்வேன்! எ.று.
அணிமையில் வருதலாவது, உயிர்க்குயிராய் உடனாய் இருந்தருளுதல், பொருட்டன்மையால் வேறாயிருக்கின்ற பரம்பொருள் பொருள்களில் கலந்து நிற்பதால் ஒன்றாயும், உயிர்க்குயிராய் அறிவொளி யருளும் தன்மையால் உடனாயும் இருப்பது சைவ நூல்களின் துணிபாதலால் உடனாதலை “மிக்க அண்மையில் வந்தருள் புரிவோய்” என்று கூறுகிறார். “உலகெலாமாகி வேறாய் உடனுமாய் ஒளியாய் ஓங்கி அலைகிலா வுயிர்கள் கன்மத்து ஆணையின் அமர்ந்து செல்ல” (சிவ-சித்தி) என்று அருள்நந்தி சிவனார் கூறுவது காண்க. வளமான பேரன்பு நிறைந்த உள்ளமுடைய சிவநேயச் செம்மல்களை “வன்மை பெறுநின் அன்பர் எல்லாம்” எனவும், மனமொழி மெய்களால் வழிபடுமிடத்து உள்ளத்தே ஊறிப் பெருகும் சிவானந்தத்தில் திளைக்கும் அவரது நிலைமை விளங்க, “நின்னை வந்தனைசெய் தானந்த வயத்தே நின்றார்” எனவும் இசைக்கின்றார். எல்லாம் என்பது எஞ்சாப் பொருட்டாய் வருவதோர் உரிச்சொல் என்பாரும் உளர் (தொல்.சொல்.சேனா). நிறையின்றிப் பல வகையாய் நினைந்து அலையும் மனத்தைப் பெண்மையுறு மனம் என்பர். “பெண்ணெனப் படுவ கேண்மோ பீடில பிறப்பு மாதோ, உண்ணிறை உடைய வல்ல ஓராயிரம் மனத்தவாகும்” (சீவக) என்று திருத்தக்க தேவர் கூறுதல் காண்க. மனவொருமை யில்லாமையால் இறைவன் பொருள் சேர் புகழ்களை முறைப்பட எடுத்தோதும் திறமையின்மை பற்றித் “திகைத்தேன்” எனவும், அதனால் எழும் அச்ச மிகுதியால் “பேசுகிறேன்” எனவும், பேதைமைத் தன்மையால் வாய் விட்டு முறை மாறிப் பேசுதற்கு அஞ்சுவதில்லை என்பார் “நானோர் பேதை கூசுகிலேன்” எனவும் கூறுகின்றார். தவறிய வழி வரும் இழுக்கத்தை எண்ணி வருந்தும் நல்லறிவு இல்லாதவன் எனத் தம்மை இகழ்கின்றவர் “ஒண்மையிலேன் ஒழுக்கமிலேன்” என உரைக்கின்றார். உள்ளத்தின் கண் நல்லுணர்வும் நற்பண்பும் இல்லாமையால் உட்சேகு இல்லாத (வயிரமில்லாத) ஒதி மரம்போல் உயரமாக வளர்ந்திருக்கிறேன் என்பார். “நன்மை யென்பதொன்று மில்லேன் ஒதியே போல் உற்றேன்” எனப் பழிக்கின்றார். “ஒதி பருத்தாலும் தூணாகாது” என்பது பழமொழி.
இதனால், மனவொருமை இல்லாமைக்கு வருந்தி முறையிட்டவாறாம். (8)
|