பக்கம் எண் :

612.

     பொறுக்கினும் அன்றிஎன் பொய்ம்மை நோக்கியே
     வெறுக்கினும் நின்அலால் வேறு காண்கிலேன்
     மறுக்கினும் தொண்டரை வலிய ஆண்டுபின்
     சிறுக்கினும் பெருக்கமே செய்யும் செல்வமே.

உரை:

     தொண்டர் அல்லேன் என மறுத்தாலும் விடாது வலியத் தொடர்ந்து ஆட்கொண்டு அவர்கட்கு அளவிற் சுருங்கினும் பயன் பெருக நல்கும் செல்வம் போன்ற சிவபெருமானே, என் பொய்ம்மையொழுக்கங்களை நோக்கி அருளாற் பொறுத்தாலும் வெகுண்டு வெறுத்தாலும் நின்னைத் தவிர எனக்குப் பற்றாவார் வேறு யாரையும் அறியேன். எ.று.

     நம்பியாரூரரை ஆட்கொண்டதுபோல ஆள் என்று சொல்லி யழைப்பினும் மறுப்பவருண்மையின் “மறுக்கினும்” என்றும், விடாது தொடர்ந்து பற்றிக்கொண்டமையின் “வலிய ஆண்டு” என்றும் கூறுகின்றார். குறைந்த அளவிற் றாயினும் நிறைந்த பயன் தருவதே செல்வத்துக்குச் சிறப்பென்பது பற்றிச் சிறப்புடைய அச் செல்வத்தைச் சிவத்துக்கு உவமம் செய்கின்றாராதலின், “சிறுக்கினும் பெருக்கமே செய்யும் செல்வமே” என இயம்புகின்றார். பொறுத்தற்கரிய குற்றம் செய்யினும், தலைவரதுள்ளம் அருள் நிறையும்போது பொறுத்தலையே செய்யுமாதலால் “என் பொய்ம்மை நோக்கிப் பொறுக்கினும்” எனவும், வெகுண்ட வழி வெறுப்பவாதலின் “வெறுக்கினும்” எனவும், தமக்குப் பற்றாவார் பிறர் இன்மை வலியுறுத்தற்கு “நின்னலால் வேறு காண்கிலேன்” எனவும் உரைக்கின்றார்.

     இதனால், அருளினும் வெகுளினும் சிவனையல்லது தமக்குப் பற்றாவார் பிறரில்லை என்பது வற்புறுத்தியவாறாம்.

     (2)