பக்கம் எண் :

614.

     வள்ளலே நின்அடி மலரை நண்ணிய
     உள்ளலேன் பொய்ம்மையை உன்னி என்னையாட்
     கொள்ளலே இன்றெனில் கொடிய என்தனை
     எள்ளலே அன்றிமற் றென்செய் கிற்பனே.

உரை:

     வள்ளலாகிய சிவபெருமானே, உன்னுடைய திருவடித் தாமரையை அடைதற்கு நினையாத என் பொய்த்தன்மையை மனத்தில் எண்ணி என்னை ஆட்கொள்ளுக; அதற்குரிய நற்பான்மை என்பால் இல்லையெனில் கொடுமையுடைய என்னை இகழ்ந்து தள்ளுக; உன் குறிப்புக்கு மாறாக யான் யாது செய்யவல்லேன்? எ.று.

     இரப்பார் இயல்பைப் பொருளாக நோக்காது அவர் வேண்டுவது விரைந்து ஈயும் வண்மை சிவன்பால் உண்மை கண்டு இறைஞ்சுதலால், “வள்ளலே” என வேண்டுகின்றார். உலகியற் போகங்களில் தோய்ந்து இறைவன் திருவடியை மறந்துகிடந்த நிலையையும், அதனைப் புறத்தே மறைத்தொழுகிய பொய்ம்மையையும் இறைவன் நன்குணர்தலை நினைந்து மொழிகின்றாராதலின், “அடிமலரை நண்ணிய உள்ளலேன்” என்றும், “பொய்ம்மையை உன்னி” என்றும் உரைக்கின்றார். திருவடி நினையாமையையும் பொய்த்தொழுகிய திறத்தையும் சிவனே நீ எண்ணுவையாயின் என் அறிவின்கண் தெளிவின்மை கண்டு இரக்கமுற்று ஆட்கொள்வாயென்பார், “என்னை ஆட்கொள்ளல்” என்று வேண்டுகிறார். இரங்குதற் குற்ற தன்மை என்பால் இல்லையாயின், இல்லாமையைச் செய்த கொடுமைக்கு இடமாகிய என்னை இகழ்ந்து புறத்தே தள்ளுக எனச் சொல்வாராய், “இன்றெனில் கொடிய என்றனை எள்ளல்” எனவுரைத்து, என்னைப் புறம் போக்குவையேல் கொடியனாயினும் நான் உனக்கு மாறுபட்டு ஒன்று செய்யும் வன்மையுடையேனல்லேன் என்பாராய், “அன்றி மற்று என்செய் கிற்பனே” என்று மொழிகின்றார். அன்றுதல் - மாறுபடுதல்.

     இதனால், என்னை ஏன்று கொள்ளினும் தள்ளினும் மாறுபட்டு ஒன்றும் செய்ய வல்லேனல்லேன் என்பதாம்.

     (4)