620. மெய்ம்மையே அறிகிலா வீண னேன்இவன்
உய்ம்மையே பெறஉனை உன்னி ஏத்திடாக்
கைம்மையே அனையர்தம் கடையில் செல்லவும்
பொய்ம்மையே உரைக்கவும் புணர்த்த தென்கொலோ.
உரை: மெய்ம்மைத் தன்மையைச் சிறிதும் அறிந்துகொள்ள மாட்டாத வீணனாகிய இவன் உய்தி பெறற் பொருட்டு உன்னை மனத்தில் எண்ணி ஏத்துதல் இல்லாத கைமையாளரை யொத்த கீழ் மக்கள் மனைக்கடைச் செல்லுதற்கும் பொய்மையுரைத்தற்குமென அமைத்தது என்னையோ? கூறுக. எ.று.
தன்னைப் பிறன்போற் கூறும் குறிப்பு வகையில் இப் பாட்டு அமைந்துள்ளது. உண்மைத் தன்மையை உள்ளவாறு உணரும் திறம் இல்வழி ஒருவன் தனக்கோ பிறர்க்கோ பயன்படாத வீணனாதல்பற்றி, “மெய்ம்மையை யறிகிலா வீணனேன் இவன்” என்று கூறுகிறார். வீணனேன் எனத் தன்மைக்கண் தொடங்கி இவன் உனையேத்திடாக் கைமை யனையர்தம் கடையிற் செல்லவும் பொய்மை யுரைக்கவும் புணர்த்தது எனப் படர்க்கையில் வைத்து முடித்தது இகழ்ச்சி பற்றியென அறிக. “சாத்தன்றாய் இவற்றைச் செய்வலோ” எனப் படர்க்கையில் தொடங்கித் தன்மைக்கண் முடித்தல்போல என அறிக. உய்தி - உய்மை என வந்தது. உய்தி பெறுவார் இறைவனை உன்னி யேத்துவது முறையாதலால், “உய்மையே பெறவுனை உன்னி ஏத்திடா” என்று குறிக்கின்றார். கைமை யனையர் - கைம்மையாளர் போல்வார். கைமையாளர் மகளிராதலின், “கைமை யனையர்” எனக் கூறுகின்றார். இவர்களைக் கயவர் எனக் கொள்ளினும் அமையும். கயவர் மனை வாயிற்குச் சென்று இரப்பதும், பொய்யுரைகளையே புகல்வதும் பெருந் துன்பத்துக்கேதுவாய தீவினைகளாதலால், இவற்றைச் செய்தற்கு உற்ற காரணம் யாதாமென நினைக்கின்றாராதலின், “புணர்த்த தென் கொலோ” எனப் புகல்கின்றார்.
இதனால், வீணனாகிய யான் கயவர் மனைவாயிற் சென்று இரக்கவும், பொய்யுரைக்கவும் நேர்ந்ததற்குக் காரணம் யாதாமென நினைந்தவாறு. (10)
|