பக்கம் எண் :

621.

     என்னுடை வஞ்சக இயற்கை யாவையும்
     பொன்னுடை விடையினோய் பொறுத்துக் கொண்டுநின்
     தன்னுடைய அன்பர்தம் சங்கம் சார்ந்துநான்
     நின்னுடைப் புகழ்தனை நிகழ்த்தச் செய்கவே.

உரை:

     பொன்மகளை மனைவியாகக் கொண்ட திருமாலாகிய விடையை யுடையவனே, என்னிடத்துள்ள வஞ்ச வியல்புகள் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு, நின்பால் அன்புடைய நல்லோர் சங்கத்தையடைந்து நின்னுடைய திருப்புகழை நான் எடுத்துரைக்கும் பணியினை அருளுக. எ.று.

     பொன் - திருமகள். பொன்னுடை விடை - தி்ருமகளை மனைவியாகவுடைய திருமாலாகிய விடை. ஒருவர்பால் உள்ள தீய பண்பு செயல்கள் நல்லோர் இணக்கத்தால் நீங்கும் என்பது பற்றி, “நின் தன்னுடை அன்பர்தம் சங்கம் சார்ந்து” என்றும் இறைவனுடைய பொருள் சேர் புகழையோதும் நற்செயல் இருள் காரணமாக உண்டாகும் தீ வினை நீக்கத்துக்கு ஏதுவாம் என்பதால், “நான் நின்னுடைப் புகழ்தனை நிகழ்த்தச் செய்க” என்றும் இயம்புகின்றார். “இருள்சேர் இருவினையும் சேரா விறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு” என்று திருக்குறள் உரைப்பது காண்க.

     இதனால், அன்பர் சங்கம் சார்ந்து சிவன் புகழை யோதுவது தீ வினை நீக்கத்துக்கு வாயிலாதல் காட்டியவாறு.

     (11)