622. நிகழும்நின் திருவருள் நிலையைக் கொண்டவர்
திகழும்நல் திருச்சபை அதனுட் சேர்க்கமுன்
அகழுமால் ஏனமாய் அளவும் செம்மலர்ப்
புகழுமா றருளுக பொறுக்க பொய்ம்மையே!
உரை: பெருமானே, சிறப்புற்றிருக்கும் நின் திருவருட் பெரு நிலையை மனத்திற் கொண்ட சான்றோர் இருந்து விளங்கும் திருவுடைய நற்சபையின்கண் எளியேனைச் சேர்த்தருள்க. முன் காலத்தே திருமால் பன்றியாய் நிலத்தை அகழ்ந்து காண முயலும் சிவந்த மலர் போலும் திருவடியை அடியேன் புகழ்ந்தோதுமாறு அருள் செய்க; என்னுடைய பொய்ம்மைகளைப் பொறுத்தருள்க. எ.று.
நிகழ்தல் - சிறப்புற்று விளங்குதல். திருவருள் நிலை - சிவஞானம் பெருகியிருக்கும் திறம். தி்ருவருள் ஞானம் தம்மகத்தே நிறையக் கொண்ட சான்றோர் கூடிய நற்சபை, “திருச்சபை” எனப்படுகிறது; அத் திருவருள் ஞானிகளுடன் தம்மையும் சேர்க்கவேண்டும் என்பார், “அதனுட் சேர்க்க” என வேண்டுகிறார். சிவஞானச் செல்வர்கள் கூடிய ஞான சபையின்கண் சிவன் திருவடிகளே சிந்திக்கப்படு மாதலால் அவ்வியல்பை, “மால் ஏனமாய் அளவும் செம்மலர்” என்றும், அதனைச் சிந்திப்பதும் புகழுவதும் ஞானச் செயலாதலால் “புகழுமாறருளக” என்றும் இயம்புகின்றார். பொய்ம்மை மனத்தின்கண் இருள் படிவித்து உண்மையில் ஒளியை மறைப்பதுபற்றிப் “பொய்மை பொறுக்க” என வேண்டுகிறார்.
இதனால், ஞானிகளின் ஞான சபையிற் சேர்ந்து திருவடி சிந்திக்க அருளவேண்டுமாறு காணலாம். (12)
|