பக்கம் எண் :

624.

     இகழ்ந்திடேல் எளியேன் தன்னைநீ அன்றி
          ஏன்றுகொள் பவரிலை அந்தோ
     அகழ்ந்தென துளத்தைச் சூறைகொண் டலைக்கும்
          அஞரெலாம் அறுத்தருள் புரிவாய்
     புகழ்ந்திடுந் தொண்டர் உளத்தினும் வெள்ளிப்
          பொருப்பினும் பொதுவினும் நிறைந்து
     திகழ்ந்தருள் பழுக்கும் தெய்வதத் தருவே
          செல்வமே சிவபரம் பொருளே.

உரை:

     நின் புகழ்களை நாடோறும் ஓதும் தொண்டர்கள் மனத்திலும் வெள்ளி மலையிலும் பொதுவாகிய அம்பலத்திலும் நிறைந்து விளங்கித் திருவருளாகிய பழம் கனிந்து நிற்கும் தெய்வ மரமே, செல்வமே, சிவமாகிய பரம்பொருளே, என்னை இகழ்ந்து தள்ளிவிடாதே, எளியவனாகிய என்னை வருக என ஏற்றுக் காத்தாள்பவர் நீயன்றி வேறு யாவருமில்லை; என் மனத்தைக் குடைந்து தோண்டிச் சூறையாடி வருத்தும் துன்பமனைத்தும் வேரொடு தொலைத்து நினது திருவருளைப் புரிக; இல்லையாயின் என் வாழ்வு துன்பத்துக்கிரையாகிக் கெட்டழியுமென அஞ்சுகிறேன். எ.று.

     இடையறாத நினைவால் இறைவன் புகழ்களை ஓதித் துதிப்பதே தொண்டர் செயலாதலின் “புகழ்ந்திடுந் தொண்டர் உளத்தினும்” எனப் புகல்கின்றார். “நினைப்பவர் மனம் கோயிலாக் கொள்பவன்” (கோயில்) என்று திருநாவுக்கரசர் சொல்கிறார். வெள்ளிப் பொருப்பு - வெள்ளிமலை. எப்பொழுதும் வெள்ளிப் பனி மூடியிருப்பது கொண்டு கயிலைமலை வெள்ளிமலை எனப்படுகிறது. பொது - அம்பலம். எல்லார்க்கும் எப்பொழுதும் அருள் வழங்குவது பற்றிச் சிவனை, “அருள் பழுக்கும் தெய்வத் தருவே” என்கின்றார். சிவபரம் பொருள் - சிவமாகிய பரம் பொருள். ஏற்று ஆதரிப்பவர் பிறர் உளராயின் எளிமை கண்டு என்னை இகழ்வது பொருந்தும். உலகத்தில் வேறு எவரும் நின்னையன்றி யிலராதலின் என்னை ஏற்றே தீருதல் வேண்டுமென்பார். “இகழ்ந்திடேல்” என எதிர்மறை வாய்ப்பாட்டால் இறைஞ்சுகிறார். சூறைக் காற்றால் மரங்களேயன்றி மணற் குன்றுகளும் அகழ்ந்தெறியப்படுதல் உண்மையின் தமதுள்ளத்தைத் துன்பமாகிய சுழற்காற்று அகழ்ந்து அலைக்கிற தென்பார், “அகழ்ந்தென துள்ளத்தைச் சூறை கொண்டலைக்கும் அஞரெலாம்” எனவும், துன்பத்தை வேரோடு களைந்தெறிந்தா லன்றி உய்தியில்லை என்பது புலப்பட, “அஞரெலாம் அறுத்து அருள் புரிவாய்” எனவும் உரைக்கின்றார். அஞர் - துன்பம். சூறை - சுழற்காற்று.

     இதனால், துன்பத்தால் அலைக்கப்படுகின்ற தமது துயர்க்கஞ்சி இரங்கி மொழிந்தவாறாம்.

     (2)