பக்கம் எண் :

627.

     பெருமையிற் பிறங்கும் பெரியநற் குணத்தோர்
          பெற்றதோர் பெருந்தனிப் பொருளே
     அருமையிற் பிரமன் ஆதிய தேவர்
          அடைந்தநற் செல்வமே அமுதே
     இருமையிற் பயனும் நின்திரு அருளே
          என்றுநின் அடைக்கலம் ஆனேன்
     கருமையிற் பொலியும் விடநிகர் துன்பக்
          களைகளைந் தெனைவிளைத் தருளே.

உரை:

     குணம் மிகுதியால் மேன்மையுறும் பெரிய நற்குணங்களை யுடைய அடியவர் பெற்று மகிழும் பெரிய ஒப்பற்ற பரம்பொருளே, அருமுயற்சி செய்து பிரமன் முதலிய தேவர்கள் எய்திய செல்வமே, அமுதமே, இம்மை மறுமைகளிற் பெறலாகும் பயன்கள் யாவும் நினது அருளால் ஆனவை யென்று கருதி நினக்கு அடைக்கலமாயினே னாதலால், கரிய நிறம் கொண்டு விளங்கும் விடம் போன்ற துன்பமாய் என்னைப் பிணிக்கும் களைகளைப் போக்கி என்பால் ஞானப் பயிர் விளைவித்தருள்க. எ.று.

     நற்குணங்கள் பலவற்றின் மிகுதியால் பெரியராய நன் மக்களைப் “பெருமையிற் பிறங்கும் பெரிய நற்குணத்தோர்” என்றும், அவற்றை யுடைமையால் அவர்கள் பெறும் பயன் வடிவாகப் பரம்பொருள்இருக்கின்றதென உணர்த்தற்குப் “பெற்றதோர் பெருந்தனிப் பொருளே” எனவும், பெருமையுடைய பொருள் அத்தனையும் பெரும் பொருள் எனப்படுமாயினும் அவற்றின் வேறாய், மேலாய் ஒப்பற்றது இப் பரம்பொருள் என்றற்குப் “பெருந்தனிப் பொருளே” எனவும் உரைக்கின்றார். பெறற்கருமை நோக்கிப் பிரமன் திருமால் முதலியோர் செல்வம் எனக் கருதுவது விளங்க, “அருமையிற் பிரமன் ஆதிய தேவர் அடைந்த நற்செல்வமே” என்றும், “அமுதே” என்றும் பரவுகின்றார். இம்மை, மறுமைகளில் மக்கள் செய்யும் நல்வினைப் பயன்கள் யாவும் அப் பெருமான் திருவருளால் எய்துவனவாகலின், அருளுருவாய் உன்னையே புகலடைந்தேன் என்றற்கு, “இருமையிற் பயனும் நின் திருவருளே என்று நின் அடைக்கலமானேன்” எனவுரைக்கின்றார். விடம் பட்ட பொருள் யாவும் நிறத்தாற் கருகி விடுதலின், “கருமை பொலியும் விடம்” எனக் குறிக்கின்றார். விளையும் பயிர் ஓங்கவிடாது இடையூறு செய்யும் களைபோல, தமது அருள் ஞான முயற்சி, தடைப் படுதற்கு அஞ்சி, இறைவன்பால் முறையிடுகின்றாராதலால், “துன்பக் களை களைந்தெனை விளைத்த ருளே” என முறையிடுகின்றார். ஞானப் பயிரை யெடுத் தோதாதாமையின் இஃது ஏகதேச உருவகம்.

     இதனால், தம்பால் தடை நீக்கிச் சிவஞானம் விளைவித்தருளுமாறு வேண்டிக்கொண்டவாறாம்.

     (5)