630. என்றுநின் அருள்நீர் உண்டுவந் திடும்நாள்
என்றுநின் உருவுகண் டிடும்நாள்
என்றுநின் அடியர்க் கேவல்செய் திடும்நாள்
என்றென தகத்துயர் அறும்நாள்
மன்றுள்நின் றாடும் பரஞ்சுடர்க் குன்றே
வானவர் கனவினும் தோன்றா
தொன்றுறும் ஒன்றே அருண்மய மான
உத்தம வித்தக மணியே.
உரை: அம்பலத்தில் நின்றாடுகின்ற பரஞ்சுடர் உருவாகிய குன்றமே! தேவர்கட்குக் கனவிலும் காண முடியாத ஒன்றாய் நிலவும் ஒரு பொருளே! திருவருளே திருமேனியாகக் கொண்ட உத்தமமான வித்தக வுருவில் விளங்கும் மணியே! நினது திருவருளாகிய நன்னீரை உண்டு இன்புறும் நாள் எந்நாளோ? நினது திருவுருவைக் கண்டு மகிழும் நாள் எப்பொழுதோ? நின்னுடைய அடியவர்க்கு ஏவலனாய்ப் பணி செய்யும் நாள் எந்நாளோ? என் மனத்தின்கண் நிறைந்துள்ள துன்பங்கள் ஒழிவது எந்நாளோ? ஒன்றுமறியாமல் அச்சத்தால் வருந்துகின்றேன். எ.று.
அம்பலத்தில் நின்று ஆடல் புரிவது சகளத் திருமேனியை யுடைய கூத்தப் பெருமானுடைய திருவுருவாயினும், நிட்கள வுருவில் பரஞ்சுடராய் உயர்ந்தோங்கி நிற்பது என்றற்கு, “மன்றுள் நின்றாடும் பரஞ்சுடர்க் குன்றே” எனவும், அதுதானும் புகழ்தற்குரிய போகநுகர்ச்சி யொன்றே யுடைய தேவர்களுக்கும் காண்டற்கு அரியதென்றற்கு, “வானவர் கனவிலும் தோன்றாது ஒன்றுறும் ஒன்றே” எனவும் மொழிகின்றார்.புகழ் எல்லையைக் கடந்த சிவபோகப் பொருள் சிவமாகிய ஒன்று என்பது இதனாற் பெறப்படும். “புகழ்ச்சியைக் கடந்த போகமே” (பிடித்த) என்று திருவாசகம் ஓதுவது காண்க. எல்லாப் பொருள்களும் முடிவில் தன்கண்ணே ஒன்றி ஒடுங்குமாறு நிற்கும் ஒன்றாகிய முழுமுதற் பொருள் என்றற்கு, “ஒன்றுறும் ஒன்றே” எனவும் உரைக்கின்றார். “ஒன்றென்ற தொன்றே காண், ஒன்றே பதி” என்று சிவஞான போதம் கூறுகிறது. திருவருளைக் கடல் என உருவகம் செய்தல் உண்மையின், அதன்பாற் குறைவற நிறைந்து நிற்கும் திருவருளை “நன்னீ”ரென்றும், அதனைப் பெற்று மகிழ்வதை “உண்டுவப்பது” என்றும் உருவகம் செய்கின்றார். அருளே திருமேனியாதலின், அதனைக் காண எழும் வேட்கையை “என்று நின் உருவு கண்டிடும் நாள்” என்று வெளிப்படுத்துகிறார். அடியார்க்கு ஏவல் செய்வது பெரியதொரு பதி புண்ணியம் என்பவாகலின், “அடியவர்க்கு ஏவல் செய்திடும் நாள் என்று” என வேண்டுகிறார். “தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் நமக்கு உண்டுகொலோ” (ஆரூர்) என்பர் திருநாவுக்கரசர். இவ் வேண்டுகோள் நிறைவுறுமாயின், மன வேட்கையால் எழுகின்ற துயர் அறக் கெடுதலின் “எனது அகத்துயர் அறு நாள்” என இரங்குகின்றார்.
இதனால், இறைவன் திருவருள் பெற்று உவகை பெறும் காலம் எப்பொழுதென இரங்கி யிறைஞ்சியவாறாம். (8)
|