631. வித்தகம் அறியேன் வினையினேன் துன்ப
விரிகடல் ஆழ்ந்தனன் அந்தோ
அத்தக வேனை எடுப்பவர் நின்னை
அன்றிஎங் கணும்இலை ஐயா
மத்தகக் கரியின் உரிபுனை பவள
வண்ணனே விண்ணவர் அரசே
புத்தக நிறைவின் அடியவர் வேண்டும்
பொருள்எலாம் புரிந்தருள் பவனே.
உரை: ஐயனே, மத்தகத்தை யுடைய யானையின் தோலைப் போர்வையாகக்கொண்ட பவளம் போன்ற திருமேனியை யுடையவனே, தேவர்கட்கு வேந்தனே, புதுமைசான்ற மனத்தின்கண் அன்பு நிறையவுடைய அடியார்கள் விரும்புகின்ற பொருள்கள் அனைத்தையும் பரிவுடன் நல்குபவனே, சதுரப்பாடு ஒன்றுமில்லாத யான் வினை மிக வுடையனாதலால், துன்பமாகிய விரிந்த கடலின்கண் ஆழ்ந்து வருந்தும் அத்தகைய இயல்புடைய என்னை எடுத்து, இன்பமாகிய கரையில் விடுப்பவர் நின்னையன்றி இவ்வுலகில் எவ்விடத்தும் இல்லையே என்று அஞ்சுகின்ற என்னை ஆதரித்தருள்க. எ.று.
பவளம் போன்ற திருமேனியில் கரிய யானைத் தோலைப் போர்வையாகக் கொண்டிருப்பது, மானதக் காட்சிக்கு இன்பந் தருதலின்,“மத்தகக் கரியின் உரிபுனை பவள வண்ணனே” எனப் புகழ்கின்றார். உரி, உரிக்கப்பட்ட தோல், பவள மேனியில் வெண்ணீ றணிவதும் ஒரு பொலிவு தருவது கண்டு, திருமாளிகைத் தேவர், “நீறணி பவளக் குன்றமே” யென்று இசைத்து மகிழ்வது நினைவுகூறத் தக்கது. விண்ணவர்க்கரசனாகிய இந்திரனுக்கும் வேண்டுமிடத்துப் பாதுகாப்பளித்துப் புரந்தரும் நலமுடைமையால், “விண்ணவர் அரசே” என விளம்புகின்றார். புதியராய் அடிமை பூணும் அன்பர்க்கும், பழவடியார்க்குப் போலக் குறைவற நலம் புரிதலின், “புத்தக நிறைவின் அடியவர் வேண்டும் பொருள் எலாம் புரிந்தருள்பவனே” என்று மொழிகின்றார். “புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதோ” என வுரைக்கும் திருவாசகம் புதியராய அடியார்க்கு நிரம்ப அருளுதல் வேண்டும் என்ற குறிப்புத்தோன்ற நிற்பது காணலாம். வித்தகம் - நால்வகை உபாயத்திலும் வல்லமை. வினை மிக வுடைமையால், பெருந் துன்பத்திற் குள்ளாயினேன் என்பார். “வினையினேன் துன்ப விரிகடல் ஆழ்ந்தனன்” என இரங்குகின்றார். துன்பத்தை நுகருந்தோறும் வினை வாயிலாக நுகரவேண்டுதலின், எல்லையின்றிப் பெருகுதல் பற்றித் “துன்ப விரிகடல் ஆழ்ந்தனன்” என்கின்றார். வினைப் பயனைக் கூட்டுபவன் இறைவனாதலின் விரும்பினால் அதனைக் கூட்டாது தொடர்பறுக்க வல்லவனாம் என்பதுபற்றி, “அத்தகவேனை எடுப்பவர் நின்னை யன்றி எங்கணும் இல்லை” என்று மொழிகின்றார். “இருள் சேர் இருவினையும் சேரா, இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு” எனவும், “பாச வேர் அறுக்கும் பழம்பொருள்” (பிடித்த) எனவும் சான்றோர் கூறுவது காண்க.
இதனால், வினையாம் துன்பம் விரிதற்கஞ்சி, அதன் தொடர்பறுத்தல் வேண்டுமென இரங்கி முறையிட்டவாறாம். (9)
|