பக்கம் எண் :

7. அபராதத் தாற்றாமை

திருவொற்றியூர்

    செய்யப்படும் குற்றத்தை அபராதம் என வடமொழியில் கூறுவர். காமம் குரோதம் முதலிய ஆறனையும் தமிழில் குற்றம் என்பர். இவையே யன்றி, அறநூலும் அறவோரும் விதித்தன செய்யாமையும் விலக்கியன ஒழியாமையும் அபராதங்கள் ஆகும். மனத்தால் நினைத்தலும் வாயால் மொழிதலும் மெய்யாற் செய்தலும் வினை என்று கூறப்படும். நல்லது நினைத்தலும் அல்லது நினையாமையும், நல்லது மொழிதலும் அல்லது பேசாமையும், நல்லது செய்தலும் அல்லது செய்யாமையும் நல்லறமாகும். மாறாகச் செய்வன அனைத்தும் தீவினையும் பாவமும் அபராதமுமாகும்.

    மேலும், கணந்தோறும் மக்கள் மனநிலையில் தெளிவும், மயக்கமும், கலக்கமும் தோன்றி நின்று மறையும். இவற்றை முறையே சத்துவம், தமம் , இராசதம் என்று வடமொழியிற் கூறுவர். இவற்றால் சுகமும் துக்கமும் மோகமும் விளைகின்றன. இவற்றின் இடையறா இயக்கத்தால் மக்களினம் குற்றம் செய்து துன்பப்படுகிறது; நல்லன செய்து இன்புறுகிறது. எனினும், துக்க மோக நிலைகளால் மயக்கமும் கலக்கமும் நெடிது நிலவுதலால், குணத்திலும் குற்றம் மிகுதியாகச் செய்யப்படுகிறது. இவற்றைச் செய்வோருள் அறிவின்கண் தெளிவுடையோர் குற்றத்தை முன்னறிந்து தங்கண் நிகழாமற் காத்துக்கொள்வர்; தெளிவிலார் குற்றம் செய்து துன்புறுவர். அவர்களே தெளிவு நிலவுங்கால் தாம் செய்த குற்றத்தை நினைந்து வருந்துவர். செய்த குற்றம் தம்மை வருத்துமிடத்தும், பிறரைத் தாக்கி வருத்துமிடத்தும் அறிவுடையோர் மனம் வருந்துவர். தம்மிற் பெரியாரிடத்து அதனை உரைத்தும், எல்லார்க்கும் பெரியனாகிய இறைவன்பால் முறையிட்டும் மனம் தெளிவுறுவது அவரது இயல்பாகும். இங்கே வடலூரடிகள் தம்பால் நிகழும் குற்றங்களை முறையே சிவன்பால் முறையிட்டுத் தமது மிக்க வருத்தத்தை வெளியிட்டு ஆற்றிக்கொள்கின்றார். உடலில் தோன்றும் புண்ணை மூடிவையாமல் மருந்திட்டாற்றுவதுபோல மனப் புண்களாகிய குற்றங்களை இறைவனிடம் எடுத்துரைத்து ஆறுதல் பெறுகின்றார். குற்றங்களை மனத்தின்கண் தாங்க மாட்டாமையால் எடுத்துரைத்து ஆறுதல் பெறுதலின் இப்பகுதிக்கு அபராதத்து ஆற்றாமை என்று பெயர் தந்துள்ளார்.

    இப்பத்து, திருவொற்றியூர்க்கண் கோயில் கொண்டருளும் சிவபெருமானை முன்னிலைப்படுத்திப் புகழ்ந்து முறையிடுகின்றது.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

633.

     துச்சிலை விரும்பித் துயர்கொளும் கொடியேன்
          துட்டனேன் தூய்மைஒன் றில்லா
     எச்சிலை அனையேன் பாவியேன் என்னை
          என்செய்தால் தீருமோ அறியேன்
     பச்சிலை இடுவார் பக்கமே மருவும்
          பரமனே எம்பசு பதியே
     அச்சிலை விரும்பும் அவருளத் தமுதே
          ஐயனே ஒற்றியூர் அரைசே.

உரை:

     பூவின்றிப் பச்சிலை யிட்டுப் பரவுவாராயினும் அவர் பக்கம் விரும்பியருளும் பரம்பொருளே! எமக்குப் பசுபதியானவனே, கயிலையாகிய அந்த மயிலையின்கண் விரும்பித் தவமியற்றும் மெய்யடியார் உள்ளத்தின்கண் அமுதமாய் இனிப்பவனே, தலைவனே, திருவொற்றியூர்க்கண் கோயில் கொண்டருளும் அருளரசே, துச்சிலை விரும்பி அது பெறாமல் வருத்த மிக்குறும் கொடியவனும் துட்டனுமாய், தூய்மை சிறிதும் இல்லாத, உண்டு கழித்த இலையை ஒப்பவனாயினேன்; பாவம் புரிந்த எனக்கு எத்தகைய தண்டம் செய்தால் அது தீருமோ அறிகிலேன். எ.று.

     இறைவனுக்குப் பூச்சொரிந்து வழிபாடு செய்வது முறையாயினும், பூவில்லாதபோது பச்சிலையிட்டு வழிபடுவர்; அதனையும் அன்புடன் ஏற்றருள்வன் இறைவன் என்பர்; இறைவன் திருவடித் தாமரை சார்வதற்கு, “போதும் பெறாவிடில் பச்சிலையுண்டு” (கழு.மும்) என்றும், “பத்தி யடியவர் பச்சிலையிடினும் முத்தி கொடுத்து முன்னின்றருளித் திகழ்ந்துள தொருபால் திருவடி” (திருவிடை . மும்) என்றும் பட்டினத்தடிகள் உரைப்பது காண்க. பச்சிலையிட்டாலும் ஏற்று முத்தி கொடுத்தல் பற்றிப் “பச்சிலை யிடுவார் பக்கமே மருவும் பரமன்” என்று இசைக்கின்றார். பக்கமே என்றவிடத்து ஏகாரம் - அசை. பசுபதி - பாசத்தாற் பிணிப்புண்டு வாழும் உயிர்கட்குத் தலைவன். உலகிற் பிறந்துள அனைவரும் பாசப் பிணிப்புடைய பசுவாதலின், “எம் பசுபதி” எனவுரைக்கின்றார். அச்சிலை விரும்பும் அவர், கயிலை மலைக்கண் விரும்பியிருந்து தவம் புரியும் முனிவர். கயிலை சிவனுக்குரியதென்பது உலகறிந்த செய்தியாதலின், “அச்சிலை” என்று குறிக்கின்றார். அ-உலகறி சுட்டு. அவர் - முனிவர்கள். தேவர்கட்கே யன்றி முனிவரர்க்கும் தலைவராதலால் சிவனை “ஐயனே” என்கின்றார். ஒற்றியூர்க்கண் இருந்து அருளாட்சி புரிதல் தோன்ற “அருளரசே” எனப் பரவுகின்றார். துச்சில் - ஒதுக்கிடம். “துச்சில் இருந்த உயிர்க்கு” (குறள்) என்பர் திருவள்ளுவர். துஞ்சு இல், துச்சில் என வந்தது. உயிர்க்கு உடம்பு, உலவும், இல்லமும் உறங்கும் இடமாகவும் இருத்தல் பற்றித் துச்சில் எனப்படுகின்றது. கீழாலவத்தைக்கண் உயிர் உந்தியிலும் மூலாதாரத்திலும் கருவிகளின் நீங்கி ஓய்வுறுவது பற்றி அதற்கு உடம்பு துச்சிலாதல் பொருந்துமாறு காண்க. துச்சில் ஈண்டுச் சோம்பிக் கிடந் துறங்கும் ஒதுக்கிடத்தின் மேற்று. உழைப்பவர் நிறைந்த உலகில் சோம்பி யுறங்குவோர்க்கு இடம் கிடைத்தல் அரிதாதல் தோன்ற, “துச்சிலை விரும்பித் துயர் கொளும் அடியேன்” என்று குறிக்கின்றார். சோறு கிடைக்குமிடமும் துச்சிலாதலின், அதனை நாடி வருந்துமாறு தோன்ற இங்ஙனம் இசைத்தார் என்றலுமொன்று. வேண்டுவது பெறாதவிடத்துத் தீச்செயல் மேற்கொள்வேன் என்பார். “துட்டனேன்” என்று கூறுகின்றார். எச்சில் இலை, எச்சிலை என மருவிற்று. எச்சிற் பட்டுத் தூய்மையிலதாதலால், “தூய்மை ஒன்றில்லா எச்சிலை” எனவும், எச்சிலை புறத்தே ஒதுக்கப்படுதல் போலத் தாமும் ஒதுக்கப்படத்தக்க தீ வினையுடையேன் என்பாராய், “எச்சிலையனையேன் பாவியேன்” எனவும் இயம்புகின்றார். இத் தீ வினையாகிய பாவம் தீர்ந்தாலின்றி உய்தியில்லை என்பதை வற்புறுத்தற்கு “என்னை என் செய்தால் தீருமோ அறியேன்” என்று மொழிகின்றார், இஃது ஆற்றாமை.

     இதனால், தம்பால் கொடுமையும், துட்டத் தன்மையும், தூய்மை யின்மையும், பாவமும் ஆகிய அபராதங்கள் இருப்பது கூறி வருந்தியவாறாம்.

     (1)