641. தெவ்வண மடவார் சீக்குழி விழுந்தேன்
தீயனேன் பேயனேன் சிறியேன்
எவ்வணம் உய்வேன் என்செய்வேன் என்னை
என்செய்தால் தீருமோ அறியேன்
எவ்வணப் பொருப்பே என்னிரு கண்ணே
இடையிடாப் பசியசெம் பொன்னே
செவ்வண மணியே திகழ்குணக் கடலே
திருவொற்றி யூர்ச்செழுந் தேனே.
உரை: இளமைச் செவ்வி பொருந்திய மலை போல்பவனே, என்னுடைய கண்ணிரண்டு மொப்பவனே, பசுமை குன்றாத செம் பொன்னை ஒப்பவனே, செம்மை வண்ணமுடைய மணியே, விளங்கும் உயர்குணங்கட்குக் கடல் போன்றவனே, திருவொற்றியூர்க்கண் உறையும் செழுமையான தேன் நிகர்ப்பவனே, பகைமைத் தன்மையுடைய மகளிரது சீயொழுகும் மலக்குழியில் வீழ்ந்து தீய பண்புடைய னாயினேன்; அலைதலாற் பேய் ஒத்துளேன்; சிறுமையெலாம் உடையயான் இனி என்ன செய்ய வல்லேன்? யாது செய்தால் என் பாவ மெல்லாம் போகுமோ, தெரிகிலேன். எ.று.
யவ்வனம் என்று வடசொல் திரிந்து எவ்வணம் என வந்தது; இளமைப் பருவத்தைக் குறிப்பது. மலை போன்ற தோற்றமும் இளமைத் தன்மை மாறாமையும் உடையனாதல் பற்றிச் சிவனை, “எவ்வணப்பொருப்பே” என மொழிகின்றார். கண் இரண்டாதலின், “என் இருகண்ணே” எனச் சிறப்பிக்கின்றார். ஊனக் கண் ஞானக்கண் என மக்கட்குக் கண் இரண்டாதல் பற்றிக் கண்ணிரண்டு கூறினாரென்றலும் அமையும். பசும்பொன் காலப்போக்கில் மாற்றுக் குறைந்து வெளிறுவ துண்மை நோக்கி, “இடையிடாப் பசிய செம்பொன்னே” என்று இயம்புகின்றார். “மாற்றறியாத செழும் பசும் பொன்னே” (சற்குருமணி) எனப் பிறிதோரிடத்தும் கூறுவது காண்க. பொன்னிடத்துப் பசுமை தூய்மை குறித்தும், செம்மை நிறம் குறித்தும் நிற்பன என அறிக. செவ்வண மணி - சிவந்த மாணிக்க மணி. “மருவார் கொன்றை மதிசூடி மாணிக்கத்தின் மலைபோல வருவார்” (கடவூர் மயானம்) எனச் சுந்தரர் பாடுவது காண்க. நலம் புரியும் குணங்கள் எல்லையில்லனவாய்ப் பெருகியிருப்பது பற்றித் “திகழ் குணக்கடல்” எனவும், அவை யத்தனையும் இறைவன்பால் உண்மையின் அவனைக் “குணக்கடல்” எனவும் குறிக்கின்றார். கணவன் மனைவியர் வாழ்வில் இருவர்பாலும் முதுமை தோன்றி நினைவு செயல்களை வேறுபடுத்துமிடத்துக் காதலன்பு நின்ற வுள்ளத்தில் வெறுப்புத் தோன்றி அன்புத் தொடர்பை வெட்டிவிடுகிறது. இது பெரும்பான்மை வழக்காதல் பற்றித் “தெவ்வண மடவார்” என்று தெரிவிக்கின்றார். மகளிர் மூத்திரக்குழியில் வெண்ணிற நீரும் குழம்பும் ஒழுகுதல் பற்றிச் சீக்குழி என்று இகழ்கின்றார். சீயொழுகும் நிலையில் கூட்டம் பெறும் ஆடவன் சீநோயுற்று மக்கட் பேற்றுக்குப் பகையாய் மாறுதலால், “தீயனேன்” என்றும், ஆசை மீதூர்ந்து அவாவடி வின்னாய் அலைவது கண்டு “பேயனேன்” எனவும், தெளிந்த அறிவின்மை காரணமாக அவன் இந்நோய்க்குக் காரணமாதலால், “சிறியேன்” எனவும் உரைக்கின்றார். பெண்ணோயுற்றுக் கெட்டார்க்கு உய்தி காண்பது அருமையாதல் தெளிந்து “எவ்வண்ணம் உய்வேன் என்செய்வேன்” என்று புலம்புகின்றார்.
இதன்கண், மடவார் சீக்குழி விழுந்தேன், தீயன், பேயன், சிறியன் என்று கூறுவன அபராதம்; என் செய்தால் தீருமோ என்பது ஆற்றாமை. (9)
|