9. அருளியல் வினாவல்
திருமுல்லைவாயில்
இறைவன் செய்யும் படைத்தல் முதலிய ஐவகைத்
தொழில்களில் உயிரில் பொருள்கட்குச் செய்வன படைத்தல், காத்தல், அழித்தல் என்ற
மூன்றுமாகும்; உயிர்ப் பொருட்குச் செய்வன மறைத்தல், அருளல் என்ற இரண்டுமாகும்; இவ்விரண்டுமே
அருளியல் என்று வழங்குவதுண்டு. கண் முதலிய கருவிகளைக் கொண்டு காண்டல் முதலியன
செய்கின்றோம்; ஆயினும் ஒரு காலத்தில் ஓரிடத்தில் ஒன்றைத்தான் பார்த்து உணர்வது
உணர்கின்றோம். ஒருகாலத்தே பலவற்றை உணர முடியாமை நமக்கு இயல்பு. சான்றோரும்
“ஒன்றொன்றாய்ப் பார்த்துணர்வது உள்ளமே” (சிவ. போ.) என உரைக்கின்றார்கள். ஒன்றே
நோக்குமிடத்துப் பல தோன்றுமாயின் நமது அறிவு பலதலைப்பட்டுச் சிதறித் தெளிவிழந்து
விடுகிறது. ஒன்றை நோக்குமிடத்துப் பிற கருவிகள் மறைக்கப்படுவது அறிவு வளர்ச்சிக்குத் துணை
செய்வதால் அம்மறைப்பும் அருள் வகையாகிறது. உணர வேண்டியதைத் தெளிய உணரச் செய்வதுபோல,
வேண்டாதது தோன்றாதபடி மறைக்கப்படுவதும் அருள். இவ்வருளே உருவாகவுள்ள சிவபெருமான்
அன்பர்கட்குப் பலவகையில் தெளிவு தந்தும் மறைத்தும் அருள் செய்கின்றான் அதனால் அவன்
திருக்கோயிலை யடைந்து வழிபடுவோர் பலராகின்றனர். வருவோரை வருக என வரவேற்று ஆவன செய்தல்
அருளாளர்க்கியல்பு. வந்தவிடத்து ஒன்றும் இன்னுரை யாடாமை உலகியற்கு ஒத்ததன்று. அதனை நினைந்து
வடலூரடிகள் இப்பத்தினைப் பாடியருளுகின்றார்.
இதனைப் பாடிய திருக்கோயில்
வடதிருமுல்லைவாயில் என்னும் திருப்பதியாகும். இங்கே வள்ளலார் வந்து சிவன் திருமுன்னின்று
பரவிய போது ஒரு வகை அருட் குறிப்பும் பெறாராயினார். அதனால் “வந்து பரவிய எளியேனை வா என
உரைத்து அருளாமை என்னை? இதுவும் அருள் வகையோ” எனப் பாட்டுத்தோறும் முறையிடுகின்றார். முல்லை
வாயிற் பரமனுக்கு மாசிலாமணி என்பது திருப்பெயர்.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தம் 653. தேன்என இனிக்கும் திருவருட் கடலே
தெள்ளிய அமுதமே சிவமே
வான்என நிற்கும் தெய்வமே முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
ஊன்என நின்ற உணர்விலேன் எனினும்
உன்திருக் கோயில்வந் தடைந்தால்
ஏன்எனக் கேளா திருந்தனை ஐயா
ஈதுநின் திருவருட் கியல்போ.
உரை: தேன்போல இனிமைச்சுவை நல்கும் திருவருட் கடலாக விளங்குகின்ற பெருமானே, தெளிந்த அமுது போல்பவனே, சிவபரம் பொருளே, உலகிற்கு மழைபோலக் காட்சி தரும் தெய்வமே, திருமுல்லைவாயில் என்ற பதியின்கண் எழுந்தருளும் மாசிலா மணியே, ஊன் பொதியென நின்று உணர்வில்லாத தோற்றமுடையேன் எனினும் உனது திருக்கோயில் வந்தடைந்தேன்; அடைந்தவிடத்து, ஐயனே, நீ என்ன கருதி வந்தாய் என்று ஒரு சொல்லும் கேளாமல் இருந்தாய்; இச்செயல் நினது திருவருளுக்கு இயல்பாகாதே? அருள் புரிக. எ.று.
இறைவன் திருவருள் சிந்தனைக்குத் தேன்போல் இனிமை நல்கும் ஏற்றம்பற்றி, “தேனென இனிக்கும் திருவருட் கடலே” என்று பரவுகின்றார். சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் உள்ளத்தே ஊறுவது கொண்டு இவ்வாறு கூறுகின்றார் என்றுமாம். ஞானவடிவாய இன்பம் செய்தலால் இறைவனருள் திருவருள் எனவும், பெருகுதலும் சிறுகுதலுமின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாதலால் “திருவருட் கடலே” என்றும் இயம்புகின்றார். மலை மத்திட்டுக் கடலைக் கலக்கிக் கடைந்து தேவர் பெற்ற அமுதம் போலாது சிவமே தெளிவு தரும் அமுதமாதல் தோன்ற “தெள்ளிய அமுதமே சிவமே” என்று புகல்கின்றார். வான், மழை. காணப்படாத தெய்வத்துக்குக் காணும் உருப்போலக் காலத்தே வானத்தில் தோன்றி மழை நீர் அருளுமாறு விளங்க “வான் என நிற்கும் தெய்வமே” எனக் குறிக்கின்றார். திரு முல்லைவாயிற் சிவபிரானை, இவண் போந்து திருப்பதியம் பாடிச் சிறப்பித்த சுந்தர மூர்த்திகள், “பாலி வடகரை முல்லை வாயிலாய் மாசிலா மணியே” என்று கூறி மகிழ்தலின், “முல்லைவாயில் வாழ் மாசிலா மணியே” என்று ஏத்துகின்றார். திருப்பதியந் தோறும் சுந்தரர் “பாசுபதா” என்றும், “பரஞ்சுடரே” என்றும் பாடினாரேனும் “மாசிலாமணி” என்ற திருப்பெயர் நிலை பெற்றுள்ளது; வள்ளலாரும் பாட்டுத்தோறும் “மாசிலாமணி’’ என்று ஓதி யுவகையுறுகின்றார். உலகியல் மணிகட்குப் பல் வகைக் குறையும் குற்றமும் உள்ளன; சிவபெருமானாகிய செம்மணி அத்தகைய மாசு சிறிதும் இல்லது என்பது பற்றி “மாசிலா மணி” என்று குறிக்கப்படுகிறது. உடம்பு ஊன் பொதியாயினும், உள்ளூறு பொருளாகிய உணர்வு இலனாயினேன் என்றற்கு “ஊன் என நின்ற உணர்விலேன்” என உரைத்து, எனினும் நினது திருக்கோயில் வந்தடைந்து பரவும் உணர்வு சிறிது உடையவன் காண் என்பாராய், “எனினும்” என்றும், “உன் திருக்கோயில் வந்தடைந்தால்” என்றும் உரைக்கின்றார். உன் திருக்கோயிலை வந்தடைந்தேனாயின், என்னை அருளி நோக்கி, உணர்வுடையன் வந்துள்ளான், யாதோ குறை யுடையன் எனத் திருவுள்ளத் தெண்ணி, வருக என்பது பேரருளாளனாகிய நினக்குப் பெரியதோர் இயல்பாகும்; அதனைச் செய்தருளாமல் வாளாங் கிருக்கின்றாய் என்பாராய், “ஏன் எனக் கேளாது இருந்தனை ஐயா” என்று முறையிட்டு, “நம்பி யாரூரனார்க்கு முன்பு ஒருகால் இவ்வாறு வாளாங்கிருந்து வருத்தம் விளைவித்தீர்; அடியேனுக்கு அது நினைவில் எழுகிறது: அடியராயினார் வந்தடைந்தால் இவ்வாறு வாய் வாளாதிருந்து அருள் வழங்குவது உனக்கு இயல்பு போலும்” என வினவுவாராய், “ஈது நின் திருவருட்கு இயல்போ” என்று கூறுகின்றார்.
இதனால், மணிவாசகப்பெருமான் கேட்பதுபோலச் சிவபிரான் தம்மை வருக என்று அழைத்து அருள் வழங்கவேண்டும் என்பது வள்ளலார் கருத்தாம். இதனையே பாட்டுத்தோறும் உரைத்துக் கொள்க. (1)
|