656. கங்கைஅஞ் சடைகொண் டோங்குசெங் கனியே
கண்கள்மூன் றோங்குசெங் கரும்பே
மங்கல்இல் லாத வண்மையே முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
துங்கநின் அடியைத் துதித்திடேன் எனினும்
தொண்டனேன் கோயில்வந் தடைந்தால்
எங்குவந் தாய்நீ யார்என வேனும்
இயம்பிடா திருப்பதும் இயல்போ.
உரை: கங்கை தங்கிய சடையை முடியிற் கொண்டு ஓங்குகின்ற சிவந்த கனி போல்பவனே, கண்கள் மூன்று கொண்டு உயர்கின்ற செங்கரும்பு ஒப்பவனே, குறைதலே யில்லாத வளமை யுடையவனே, திருமுல்லை வாயில் வாழ்கின்ற மாசிலா மணியே, உயர்ந்த சிவபெருமானாகிய உன் திருவடியைத் துதித்திடாத தீயவன் என்றாலும், தொண்டனாகிய யான் நின் கோயிற்கு வந்தடைவேனாயின், நீ யார் எங்கு வந்தாய் என்றேனும் சொல்லாமல் இருப்பதும் உனக்கு இயல்பாகுமோ? எ.று.
கங்கையாற்றின் ஒரு துளி நீரேனும் வெளியிற் சிந்தாதபடி செவ்விதின் தங்கிய சடையாதலின் “கங்கை யஞ்சடை” என்றும், அதனை முடியிற் கொண்டு உயர்வற வுயர்ந்து சிவந்த கனி போன்று விளங்குவது பற்றி “ஓங்கு செங்கனியே” என்றும் தெரிவிக்கின்றார். கரும்பின் கணுவும் கண்ணெனப்படுதலின், கண் பலவுடைய செங்கரும்பு போல்வதை விதந்து “கண்கள் மூன்று ஓங்கு செங்கரும்பே” என்று உரைக்கின்றார். வண்மையுடைய செல்வர் அனைவரிடத்தும் உள்ள செல்வமனைத்துக்கும் தேய்வு இருத்தல்போலச் சிவபெருமான் பாலுள்ள செல்வத்துக்குத் தேய்வென்பதே ஒருகாலத்தும் இன்மைபற்றி “மங்கலில்லாத வண்மையே” என்று இயம்புகின்றார். வண்மையே சிவத்தின் வடிவா மென்றற்குக் குணவடிவிலே வைத்துக் கூறுகின்றார். துங்கன் - உயர்ந்தவன். சிவபெருமானினும் உயர்ந்தோன் இன்மை பற்றித் “துங்கன்” என்கின்றார். திருவடியைத் துதித்தல் இல்லேனாயினும், அதனை நினைவிற் கொண்டு எஞ்ஞான்றும் பரவிய வண்ணமிருக்கும் அடியார்கட்கு இன்றியமையாத தொண்டு புரிதலையுடையேன் என்பாராய், “தொண்டனேன்” என்றும், என்னை அருளாதொழியினும், என்னை நோக்கி, நீயார், எங்கு வந்தாய் என்று வாய் திறந்து கேட்கலாம்; அது தானும் செய்கின்றாய் இல்லை; அது நல்லதோர் இயல்பு மாகாது என்று சொல்லலுற்று “எங்கு வந்தாய் நீ யார் எனவேனும் இயம்பிடா திருப்பதும் இயல்போ” என இயம்புகின்றார். (4)
|