664. தில்லை வாய்ந்த செழுங்கனி யேதிரு
முல்லை வாயில் முதல்சிவ மூர்த்தியே
தொல்லை யேன்உன்தன் தூய்திருக் கோயிலின்
எல்லை சேரஇன் றெத்தவம் செய்ததே.
உரை: தில்லைப் பதியில் எழுந்தருளும் செழுமையான கனி போன்றவனே; திரு முல்லைவாயிலிற் கோயில் கொண்ட முதற் பொருளாகிய சிவமூர்த்தியே; துன்பமுடைய யான் உனது தூய திருக் கோயிலின் எல்லையை யடைதற்குரிய பேற்றை என் தவங்களுள் எத்தவம் எய்துவித்ததோ, அறியேன். எ.று.
தில்லை மன்றின்கண் செழுமையான செங்கனி போன்ற நிறத்தொடு பொலிவது பற்றி, “தில்லை வாய்ந்த செழுங்கனியே” என்று தெரிவிக்கின்றார். திரு முல்லைவாயிலிற் முதற் பொருளாகத் திகழ்கின்ற பெருமான் சிவன் வடிவில் காட்சி வழங்குவது பற்றி, “சிவ மூர்த்தியே” என்று சிறப்பிக்கின்றார். தொல்லை - துன்பம்; ஈண்டு பிறப்பிறப்பாலுளவாகும் துன்பம். அது நீங்காமையாற்றான் பிறத்தலும் இறத்தலும் இடை யீடின்றி நிகழ்கின்றன. திருமுல்லைவாயில் திருக்கோயில் எல்லையைச் சேர்ந்ததும் சிவன்பால் அன்பு மிகுந்து இன்புறுத்துவதுணர்ந்து இக் கோயிலின் எல்லையை யடைதற்கு நல்ல தவமுடையார்க்கல்லது அமையாது; இனிது வந்தடைதற்கு யான் செய்த தவங்களில் எத்தவம் துணை புரிந்ததோ என்பாராய், “கோயிலின் எல்லை சேரச் செய்தது இன்று எத்தவம்” எனத் தமக்குள் வினவி மகிழ்கின்றார்.
இதனால், தாம் செய்த முன்னைத் தவங்களில் ஒன்று திருமுல்லைவாயில் கோயில் எல்லையை அடையச் செய்துளது என வியந்து உரைக்கின்றார். (2)
|