674. வெள்ளி மாமலை வீடென உடையீர்
விளங்கும் பொன்மலை வில்எனக் கொண்டீர்
வள்ளி யீர்என நும்மைவந் தடைந்தால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
எள்ளில் எண்ணெய்போல் எங்கணும் நின்றீர்
ஏழை யேன்குறை ஏன்அறி யீரோ
ஒள்ளி யீர்உமை அன்றிஒன் றறியேன்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
உரை: உயர்ந்த புகழ் பொருந்திய திருவொற்றியூரையுடைய பெருமானே, வெள்ளி மலையை உறையும் வீடாகக் கொண்டுள்ளீர்; ஒளி விளங்கும் பொன்மலையை வில்லாகக் கொண்டிருக்கின்றீர்; வள்ளன்மை யுடையவர் என்று கருதி உம்மை வந்தடைந்தால் வாய்திறந்து ஒரு சொல்லும் சொல்லுகின்றீரில்லை; எள்ளினுள் எண்ணெய் போல் எங்கும் எப்பொருளினும் கலந்து நிறைந்துள்ளீர்; ஏழையாகிய எனது குறையை நீர் ஏன் அறியா திருக்கின்றீர்; யானோ, ஒட்பமுடைய உம்மை யன்றி வேறு யாதும் அறியேன்; இன்சொல் ஒன்று சொல்லி யருள்வீராக. எ.று.
புகழ்மிக்க வூர் என்பதுபற்றி “ஓங்கு சீர் ஒற்றியூ ருடையீரே” என்று உரைக்கின்றார். இதனை ஏனைப் பாட்டுக்களில் உரைத்துக் கொள்க. வெள்ளைமலைப் பகுதியிலுள்ள கயிலாய பருவதம் சிவனுக்குறை விட மென்பது பற்றி “வெள்ளி மாமலை வீடென வுடையீர்” என்றும், காஞ்சன சிருங்கமென இக்காலத் துரைக்கப்படும் பொன் மலையைத் திரிபுரத்தை யழிக்க முற்பட்டபோது வில்லாக வளைத்துக் கொண்டார் என்ற புராண வரலாறு பற்றி, “விளங்கும் பொன்மலை வில்லெனக் கொண்டீர்” என்றும் விளம்புகின்றார். வள்ளன்மையுடையவரை வள்ளியோர் எனல் வழக்கு. “வள்ளியோரின் வழங்கின மேகமே” (பால) என்பர் கம்பர். திருக்கோயிலில் எழுந்தருளும் திருமூர்த்தம் பேசுவதின்மையின் “வாய் திறந்தொரு வார்த்தையும் சொல்லீர்” எனவுரைக்கின்றார். இறைவன் எங்கும் பொருளினும் கலந்திருக்கும் தன்மையை,“எள்ளில் எண்ணெய் போல் எங்கணும் நின்றீர்” என்று இசைக்கின்றார். திருவாசகம், “நள்ளும் கீழுளும் மேலுளும் யாவுளும் எள்ளும் எண்ணெயும் போல் நின்ற எந்தையே” (சதக. 46) என்று கூறுவது காண்க. எங்கும் எப்பொருளினும் கலந்திருக்கும் பெருமானாகிய நீ என்னுள்ளும் கலந்துள்ளமையால் என் குறை முற்றும் நன்கு அறிபவனாவாய்; அவ்வாறிருந்தும் என் குறையை ஏனோ அறியாதிருக்கின்றீர்; அறிந்து ஆவன செய்தருள்க என்றற்குக் “குறை ஏன் அறியீரோ” என வினவுகின்றார். என் குறையை அறிந்து கோடற்கேற்ற அறிவு என்பால் இல்லை என்பாராய், “ஏழையேன்” என்று கூறுகின்றார். ஞானமே யுருவாகிய பெருமான் நீ என்பார், “ஒள்ளியீர்” என்றும், எனக்கு அறிவருளி ஆட்கொள்ளும் அருள் மிகவுடையார் உம்மையன்றி வேறு இல்லை என்பாராய், “ஒள்ளியீர் உமையன்றி ஒன்றும் அறியேன்” என்றும் எடுத்துரைக்கின்றார்.
இதன்கண், என் குறையை நீ அறியாதிருப்பது நன்றன்று; அறிந்தால் என் குறை போக்கி அருள் செய்தல் இனிதாம் எனக் குறித்தவாறு. அருள் நாடி வந்தார்க்கு இன்சொல் உரையாதிருப்பதன் கருத்தறியேன் என்றாராம். (2)
|