681. பொய்யி லார்க்குமுன் பொற்கிழி அளித்த
புலவர் ஏறெனப் புகழ்ந்திடக் கேட்டு
மையல் கொண்டிடும் மனத்தொடும் வந்தால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல் லீர்
ஐய நும்அடி அன்றிஓர் துணையும்
அறிந்தி லேன்இஃத றிந்தரு ளீரேல்
உய்யும் வண்ணம்எவ் வண்ணம்என் செய்கேன்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
உரை: சிறப்பு மிக்க திருவொற்றியூரை யுடைய பெருமானே, பொய்யில் புலவராகிய சங்கத்தார்க்கு முற்காலத்தே பொற்கிழி யளித்த “புலவரேறு” என்று சான்றோர் பலபடப் புகழக்கேட்டு ஆசை மயக்குற்ற மனத்தொடு நுமது திருமுன் வந்தால் வாயைத் திறந்து ஒரு சொல்லும் சொல்லுகின்றீரில்லை; ஐயனே, உமது திருவடியல்லது எனக்குத் துணை வேறு ஒன்றையும் அறியேன்; இதனை அறிந்தருள வேண்டும்; இல்லையாயின், அடியேனுக்கு உய்தி தரும் வழி யாதாம்; யான் செயலாவது ஒன்றுமில்லை யன்றோ? எ.று.
முன்னாளில் மதுரையில் விளங்கிய சங்கப் புலவர்களைப் “பொய் யடிமையில்லாத புலவர்” என்று நம்பியாரூரர் போற்றிப் பரவினாராகலின், அவர்களைப் “பொய்யிலார்” என்றும், அவர் குழுவிற் புகுந்து பாட்டுக் கொணர்ந்த தருமிக்குச் சிவபிரான் புலவர் உருவிற் போந்து வாது புரிந்து பாண்டியன் நிறுவிய பொற்கிழியை அளித்தபோது சான்றோர் பலரும் சிவனாகிய தமிழ்ப் புலவரைப் “புலவரேறு” எனப் புகழ்ந்தமை நினைவு கூர்ந்து, “பொய்யிலார்க்கு முன் பொற்கிழி யளித்த புலவர் ஏறு எனப் புகழ்ந்திடக் கேட்டு” என்றும், திருவருள் பெறல் ஆமோ ஆகாதோ என்ற ஐயமின்றித் தமக்கும் சிவபெருமான் அருள் புரிகுவன் என்ற எண்ணம் மிக்கு வந்தமை புலப்பட, “மையல் கொண்டிடும் மனத்தொடும் வந்தேன்” என்றும், வந்த என்னை அன்புடன் நோக்கி ஒரு சொல்லும் கூறாமல் வாளாவிருப்பது நன்றன்று என்பாராய், “வாய் திறந்தொரு வார்த்தையும் சொல்லீர்” என்றும் முறையிடுகின்றார். அருளா தொழிந்தால் எம்போல்வார்க்கு உமது திருவடியன்றி வேறு துணையில்லை; அறிவு கலக்கமுறும் எமக்கு அறிவொளி தந்து துணை செய்வது திருவடி; இதனை நீர் திருவுள்ளத்தி லேற்றருள வேண்டும் என்றற்கு, “ஐய நும்மடி யன்றியோர் துணையும் அறிந்திலேன்; இஃது அறிந் தருளீரேல்” என்றும், அறிந்து திருவருள் ஞானத்தால் உய்யும் நெறி யருளல் வேண்டும்; வேறு செயல்வகை ஒன்றும் அறியேன் என்பாராய், “உய்யும் வண்ணம் எவ்வண்ணம் என் செய்கேன்” என்றும் தெரிவிக்கின்றார்.
இதன்கண், உயிர்கட்கு உய்தி தருவது திருவருள் ஞானம் என்பது வற்புறுத்தவாறு அறிக. (9)
|