12. திருவருள் வேட்கை
திருவொற்றியூர்
அன்புடையார் உள்ளத்து அன்பு முதிர்ந்து ஒரு காரணமின்றியும் பிறரைக் கண்டவிடத்துப்
பெருகுவதுண்டு. அதனைச் சான்றோர் அருள் என்பர். இந்த அருள் உயர்ந்தோர் உள்ளத்தூறிப் பெருகி
அவரின் தாழ்ந்தோர்பாற் சென்று இன்புறுத்தும். இறைவன் உயிர்கட்குச் செய்யும் நற்செயல்
யாவும் அருளாய்ப் பரந்து இன்பம் செய்கிறது. அந்த அருள்தான் பரம்பொருளாகிய இறைவனை நாம்
நாளும் நினைந்து பரவச் செய்கிறது. அருளே அப் பெருமானுக்குச் செல்வமாய்த் திகழ்வது.
உயிர்களின் பொருட்டு உலகைப் படைத்து, உடலைப் படைத்து, உலகுடம்புகள் நின்று செய்வன செய்தற்
பொருட்டு அறிவாற்றலைத் தந்து வாழ்விப்பதும் இறைவன் அருள். அவ்வருள் அறிவு உயிர்கட்கு
வேண்டிய அறிவு தருவதும் செயற்குரிய செயல் வகைகளை உருவாக்குவதும் முறைப்படச் செய்கிறது. உலகில்
உள்ள அறிவில் பொருள்கள் அனைத்தும் அறிவுடை யுயிர்கட்கு வாழ்தற்குத் துணையும் கருவியும் பயனும்
பொருளுமாய்ப் பயன்படச் செய்வதும் இறைவன் திருவருள். அதன் இயல்பு விளங்குமிடத்து நல்லறிவுடை
யோர்க்கு அதனைப் பெறுதற்கு விருப்பம் மிகுகிறது. உலகியல் வாழ்க்கைக்குப் பொன்னும் பொருளும்
கருவியும் பயனும் போகமும் ஆதல் பற்றி அறிவுடை மக்கள் அதனை மிகப் பெரிது ஈட்டற்கு ஆசையும்
முயற்சியும் கொள்கின்றனர்; பொன்னும் மணியுமாகிய பொருள்களைத் தொகுத்தல் வேண்டி
வேட்கையுடையராகின்றனர். நல்லறிஞர் திருவருளைப் பொருளாகக்கொண்டு அதனால் விளையும் ஞானமும்
இன்பம் நயந்து பெருவேட்கை கொள்கின்றார்கள். அவ் வேட்கை மிக்குறலால் பாடியன இங்கே
பாடப்பட்டுள்ள பாட்டுப் பத்துமாகும். பாட்டுத் தோறும் இறைவன் அருளையே நினைந்து பாடிப் பரிவது
காண்க.
கொச்சகக் கலிப்பா 683. மன்அமுதாம் உன்தாள் வழுத்துகின்ற நல்லோர்க்கே
இன்அமுதம் ஓர்பொழுதும் இட்டறியேன் ஆயிடினும்
முன்அமுதா உண்டகளம் முன்னிமுன்னி வாடுகின்றேன்
என்அமுதே இன்னும் இரக்கந்தான் தோன்றாதோ.
உரை: நிலைத்த அமுதமாகிய உன்னுடைய திருவடியை வாழ்த்தி வாழ்கின்ற நற்பண்புடைய அடியார்கட்கு ஒரு காலத்தேனும் இனிய உணவாகிய அமுதத்தை யான் அளித்தறியேன்; ஆயினும் முன் காலத்தே நஞ்சினை அமுதமாக உண்ட நின் திருக்கழுத்தை நினைந்து நினைந்து மனம் வாடுகின்றேன்; எனக்கு அமுதம் போன்ற பெருமானே, உன் திருவுள்ளத்தில் எளியனாகிய என்பால் இரக்கம் தோன்றுவ தில்லையோ, கூறுக. எ.று.
மன் அமுது - பெரிய அமுதம்; நிலைத்த அமுதமாம். அமுதுண்டார் சாவின்றி நிலை பெறுவதுபோலச் சிவனது திருவருள் பெற்றார், கெடுதலின்றி இம்மையிலும் மறுமையிலும் வளமிக்க சிவபோகம் பெறுவார்கள் என்பது குறிப்பு. வழுத்துதல், வணங்கி வாழ்த்துதல். சிவன் திருவடியை நினைத்தலும் வணங்கி வழிபடுவதும் வாயார வாழ்த்துவதும் நற்பண்புடையோர் குணமும் செயலுமாதலின், அவர்களை “நல்லோர்” என உரைக்கின்றார். அவர்கள் குறிப்பறிந்து நாளும் யான் உணவளித்ததில்லை என்பாராய், “இன்னமுதம் ஓர்பொழுதும் இட்டறியேன்” என்று கூறுகின்றார். உண்மையடியாரை உண்பித்திலேனாயினும் உலகத்துயர்ந்த தேவர்கள் நீடு வாழ்வது நினைந்தருளிக் கடல் விடமுண்ட நின் அருள் உள்ளத்தையும் செயலையும் திருக்கழுத்தின் விடக்கறை கண்டு பன்முறையும் எண்ணி யெண்ணி மனம் வருந்துவேன் என்பாராய், “முன்னமுதா உண்டகளம் முன்னி முன்னி வாடுகின்றேன்” என்று இயம்புகின்றார். வாடுகிறபோது எனது உள்ளத்தில் உன் திருவருள்பால் உண்டாகும் ஆர்வமும் நன்மதிப்பும் பெருகுகின்றன; உனக்கு எளியேன்பால் அருளுருவாகிய இரக்கமுண்டாதல் இல்லை; உண்டாகாதோ கூறுக என வேண்டலுற்று, “என்னமுதே இன்னும் இரக்கம்தான் தோன்றாதோ” என இசைக்கின்றார்.
இதன்கண், தம்பால் அருட்செயல் இன்றாயினும் இறைவன் அருட் செயலை நயந்து அவனது திருவருளில் ஆர்வம் மிக்கியிருப்பது புலப்படுத்தவாறு. (1)
|