685. காதார் கடுவிழியார் காமவலைக் குள்ளாகி
ஆதாரம் இன்றி அலைதந்தேன் ஆயிடினும்
போதார் நினதுகழல் பொன்அடியே போற்றுகின்றேன்
நீதாவோ உன்னுடைய நெஞ்சம் இரங்காதோ.
உரை: காதளவு நீண்டு கடுத்த விழியை யுடைய மகளிர் உண்டு பண்ணும் காமவேட்கை வலையிற் சிக்குண்டு விலகி மீளுதற்கு ஏற்ற ஆதரவின்றி அலைந்தொழிந்தேன்; ஆனாலும், பூப்போன்ற நின்னுடைய கழல் அணிந்த அழகிய திருவடியையே பரவுகின்றேன்; அது கண்டு, நீதனே, உனது நெஞ்சம் இரங்கி அருள் செய்யுமன்றோ? எ.று.
மகளிர்க்குக் கண் அகன்று காதளவு நீண்டிருத்தல் அழகென்பது மரபாதலின் அதுபற்றி, “காதார் கடுவிழியார்” என்றும், விழிவழி இயங்கும் பார்வை காணப்பட்டார் மேற் பாய்ந்து வேட்கை யுணர்வை எழுப்பி வருத்துமாறு விளங்கக் “கடுவிழியார்” என்றும் இயம்புகின்றார். கட்பார்வையால் தாக்குண்டோர் காமவுணர்வு மிகுந்து, நினைப்பதும் பேசுவதும் செய்வதும் யாவும் காமத் தொடர்பினராய், அக் காமக் கூட்டம் அல்லது வேறு ஆதாரமின்றி அலைவுறுவது கண்டு கூறலின், “காம வலைக்குள்ளாகி ஆதாரமின்றி அலைதந்தேன்” என்று அறிவிக்கின்றார். காம விருட் கலக்கத்தி னீங்குதற்குத் திருவருளின் அறிவொளியே ஆதாரமாவது கண்டு, அஃது இன்னும் கைகூடாமைக்கு வருந்தி, “ஆதாரமின்றி அலைதந்தேன்” என்பாராயினர். அலைதல், தருதல் என்ற துணைவினைபற்றி அலைதருதல் என வந்தது. பொற்றாமரை போல்வது பொற்பும் கழலும் அணிந்த சிவன் திருவடி எனற்குப் “போதார் நினது கழற்பொன்” என்று புகல்கின்றார். கழல் - வீரம் குறித்தணியும் காலணி. காமத்தாற் பிணிப்புண்டு வருந்தினும் நின் திருவடியே ஆதாரமென நினைந்து போற்றுகின்றேன்; ஆதலால், நீ என்பால் இரங்கியருளுதல் வேண்டும் என்பாராய், “உன்னுடைய நெஞ்சம் இரங்காதோ” என்று உரைக்கின்றார்.
இதன்கண், காமப் பிணியுற்றுக் கலங்கு மெனக்கு உன் கழலடியே ஆதாரம்; அதனைத் தந்தருள்க என வேண்டுதல் கருத்தெனப் புலப்படுத்தவாறு. (3)
|