பக்கம் எண் :

690.

     தாய்க்கும்இனி தாகும்உன்தன் தாள்மலரை ஏத்தாது
     நாய்க்கும் கடையாய் நலிகின்றேன் ஆயிடினும்
     வாய்க்கும்உன்தன் சந்நிதிக்கண் வந்துவந்து வாடுகின்றேன்
     தூய்க்குமரன் தந்தாய்என் சோர்வறிந்து தீராயோ.

உரை:

     தூய குமரப்பெருமானைத் தந்த சிவனே, தாயினும் இனிய நலம் தருகின்ற உன் திருவடித் தாமரை மலரை வழிபடாமல் நாய்க்கும் கடையனாய்க் கிடந்து வருந்துகின்றேன்; ஆயினும், வரம் பல வாய்க்கும் உன்னுடைய திருமுன்பு பன்முறையும் வந்து வருந்துகின்றேன்; நீ எனது மனச்சோர்வு கண்டு அதனைத் தீர்த்தருள்க. எ.று.

     முருகக் கடவுளை யீன்று தேவர்கட்கு இடுக்கண் விளைத்த சூரவன்மா முதலியோரைப் போக்கி யருளியது நினைந்து “தூய்க் குமரன் தந்தாய்” என்று புகழ்கின்றார். தாயினும் சாலப் பரிவுடன் மக்கட்கு அருள் வழங்கும் திறம் பற்றி, “தாய்க்கும் இனிதாகும் உன்றனதாள்மலர்” என்றும், அதனைப் பணிந்து பரவி ஏத்துவது முறையாக இருக்க, அது செய்யாதொழிதல் மிகவும் கடைப்பட்ட செயலாம் எனப் பழிக்கும் கருத்தினால், “ஏத்தாது நாய்க்கும் கடையாய் நலிகின்றேன்” என்றும் இசைக்கின்றார். எனினும், உள்ளத்தே அருட்பேற்றிலுண்டாகிய வேட்கை மீதூர்ந்து உந்துதலால், இறைவன் திருமுன் பன்முறையும் சென்று பரவிய நிலையை “வாய்க்கு முன்றன் சன்னிதிக்கண் வந்து வந்து வாடுகின்றேன்” என்றும், வாட்டத்தால் உளதாகும் சோர்வினைப் போக்கியருள்க என்பாராய், “சோர்வறிந்து தீராயோ” என்றும் முறையிடுகின்றார். வேண்டி வந்தார், வேண்டும் வரம் பலவும் கைவரப் பெறும் திருமுன் எனற்கு, “வாய்க்கு முன்றன் சன்னிதி” என்று சிறப்பிக்கின்றார்.

     இதன்கண், தாயிற் சிறந்த தயவு மிக்க திருவடி பரவாமையை எடுத்தோதித் தமக்குளதாகும் சோர்வு போக்கியருள்க; நின் திருமுன்பு வருதல் தவிரேன் என்று முறையிட்டவாறு.

     (8)