691. அறியாப் பருவத் தடியேனை ஆட்கொண்ட
நெறியாம் கருணை நினைந்துருகேன் ஆயிடினும்
குறியாப் பொருளேஉன் கோயிலிடை வந்துநின்றும்
பறியாப் பிணியேன் பரதவிப்பைப் பார்த்திலையே.
உரை: இது வுருவம் என்று குறித்தறிய வொண்ணாத பரம் பொருளே, மிக்க இளமைப்பருவத்திலேயே என்னையுன் திருவடியிற் பற்றுடையனாக்கிக் கொண்டருளிய நன்னெறியாகிய அருணிலையை நினைத்து நெஞ்சுருகாதொழிந்தேன்; ஆயினும், உனது திருக்கோயில் திருமுன் வந்து வணங்கி நீக்கிக்கொள்ளாத நோயுடையனாயினேன்; அதனால் யான் எய்தியுள்ள மிக்க துன்பத்தைக் கண்ணால் பார்க்கின்றாயில்லையே. எ.று.
அறிவதறியாப் பருவம், இளமைப் பருவம். அக்காலத்தேயே தமக்குத் திருவொற்றித் தியாகப்பெருமான்பால் பேரன்பு உண்டானது நினைந்தும், அவன் திருவடியை நெஞ்சில் உறக்கொண்டது நினைந்தும் கூறுதலால், “அறியாப் பருவத்து அடியேனை ஆட்கொண்ட” என்று இசைக்கின்றார். சிவநெறி அருள் நெறியாதல் விளங்க, “நெறியாம் கருணை” என மொழிகின்றார். இறைவன் அருள் நெறியும் அதன் நிலையும் நினைந்துருகும் நீர்மையவாதலின், அது செய்யாமைக்கு மிகவும் வருந்தி, “நெறியாம் கருணை நினைந் துருகேன்” என்று வருந்துகின்றார். திருக்கோயில் திருமுன் சென்று நாளும் பரவியும் துன்பம் நீங்காமையை, “உன் கோயிலிடை வந்து நின்றும் பறியாப் பிணியேன்” எனவும், அதனால் உளதாய மனநோயைப் “பரதவிப்” பெனவும் சொல்லி, அதனைப் “பார்த்திலையே” எனப் புலம்புகின்றார். பரதவிப்பு - பரிதவிப்பு எனவும் வழங்கும், “இன்னவுரு இன்னநிறம் என்றறிவதேல் அரிது” எனத் திருஞான சம்பந்தர் முதலியோர் உரைத் தருளுதலால், “குறியாப் பொருளே” என்று குறித்தருளுகின்றார்.
இதன்கண், தியாகேசன் திருமுன் பன்னாள் பரவியும் பரதவிப்பு நீங்காமை முறையிட்டவாறாம். (9)
|