பக்கம் எண் :

13. அபராத விண்ணப்பம்

திருவொற்றியூர்

    மல மாயைகளின் தொடர்புற்று உலகில் வாழும் உயிர்கள் முக்குண வயத்தால் குற்றம் செய்வதும் அதன் விளைவாகும் துன்பத்தில் வீழ்ந்து துயர்வதும் இயல்பாக வுள்ளவை. அவற்றுள் மக்களுயிர் அவ்வப்போது அறிவுத் தெளிவு பெற்று நல்லதன் நலம் ஓர்ந்து மகிழ்தலும் தீயதன் தீமை யோர்ந்து வருந்துதலும் உண்டு. அவ்வகையில் வடலூர் வள்ளல் தம்பால் தோன்றின குற்றங்களை எண்ணுகின்றார். குற்றம் புரிந்தவர் அதனைத் தாமே யுணர்ந்தும் பிறர் உணர்த்த உணர்ந்தும் அதற்குக் கழுவாய் நாடுவர். அதற்கு வாய்ப்பின்றேல் உயர்ந்தோரை யடைந்து குற்றத்தை எடுத்துரைத்து மன்னிப்பு நாடுவர். அவ்வகையில் மனம் தூய்மையாவது உண்மை. இப்பத்தின்கண் வள்ளற்பெருமான் தமது குற்றத்தைச் சிவன்பால் முறையிட்டு அதனைப் பொறுத்து நல்லருள் புரிதல் வேண்டும்; மறுத்துக் கைவிடின் தமக்கு உய்தியில்லை என்பதைக் கண்ணீரும் கம்பலையுமாய் நின்று கதறி மொழிகின்றார். இப் பாட்டுக்கள் பலவும் நம் அறிவைத் திருவாசகத்திற் செலுத்தி மனத்தை யுருக்கும் மாண்பு கொண்டு திகழ்கின்றன. குற்றம் வட மொழியில் அபராதம் எனப்படுதலால், அதனை இறைவன் திருமுன் தெரிவித்தொழுகும் நெறி அபராத விண்ணப்பம் என்று குறிக்கப்படுகிறது.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

693.

     தேவியல் அறியாச் சிறயனேன் பிழையைத்
          திருவுளத் தெண்ணிநீ கோபம்
     மேவிஇங் கையோ கைவிடில் சிவனே
          வேறுநான் யாதுசெய் வேனே
     மூவிரு முகம்சேர் முத்தினை அளித்த
          முழுச்சுவை முதிர்ந்தசெங்க ரும்பே
     சேவின்மேல் ஓங்கும் செழுமணிக் குன்றே
          திருவொற்றி யூர்மகிழ தேவே.

உரை:

     திருவொற்றியூரில் மகிழ்வுடன் கோயில் கொண்டிருக்கும் பெருமானே, முகம் ஆறு கொண்ட முத்து நிகர்க்கும் முருக வேளை அளித்த குறைவற நிறைந்த சுவை முதிர்ந்த செங்கரும்பு போன்ற சிவனே, எருதின்மேல் இவர்ந்து ஓங்கும் செழுமையான மாணிக்கமணி யாலாய குன்றொப்பவனே, தெய்வத் தன்மையின் இயல்பறியாத சிறுமை யுடைய என் பிழையை நின்னுடைய மனத்திற்கொண்டு சினமுற்று இவ்வுலகில் என்னைக் கைவிடுவாயாயின், சிவனே, யான் வேறே ஒன்றும் செய்ய வல்லேனல்லேன். எ.று.

     தேவியல் - தெய்வத் தன்மை. பரம்பொருளாதல் வேறு, மக்கள் கண்டு வழிபடும் பொருட்டு உருவுடைய தெய்வமாதல் வேறு. பரம் பொருட்குத் தோற்றக் கேடுகள் இல்லை; உருவமோ, நிறமோ இல்லை; தெய்வங்கட்கு உருவமுண்டு; நிறமுண்டு; தோற்றக் கேடுகள் உண்டு. “செத்துப் பிறக்கும் தெய்வங்கள்” என்பர் குமரகுருபரர் முதலிய சான்றோர். தெய்வங்கட்குப் பொறுமை பொறாமை முதலிய குணங்களும் குற்றங்களும் உண்டென்பர். இவை “தேவியல்” என்று தெரியப்படும். தெய்வ வுருவில் தோன்றும்போது சிவன்பால் இவ்வியல்புகள் காணப்படும் என்பதைத் தாம் அறியாமை தோன்ற, “தேவியல் அறியாச் சிறியனேன்” என்றும், தெய்வ வியல்புக் கேற்ப வெகுளுதலும் அருளுதலும் சிவன்பால் உளவாம் என்று அஞ்சுகின்றாராதலின், “சிறியனேன் பிழையைத் திருவுளத் தெண்ணிக் கோபம் இங்கே மேவிக் கைவிடில்” எனவும் கூறுகின்றார். பிழையை மனத்திற் கொண்டாலன்றிக் கோபம் மேவாதாகலின் “திருவுளத்தெண்ணி” என்றும், தெய்வம் கைவிடில் துணை வேறு இல்லா தொழிதலால் “வேறு நான் யாது செய்வேனே” என்றும் உரைக்கின்றார். ஆறுமுகமுடைய குமரக்கடவுளைப் பெற்ற பெருமானாதலால் “மூவிரு முகஞ் சேர் முத்தினை யளித்த செங்கரும்பே” என்றும், சுவை, மிகவும் திரண்டுயர்ந்த செங்கரும்பு எனச் சிவனைப் பாராட்டுவாராய், “முழுச்சுவை முதிர்ந்த செங்கரும்பே” என்றும், சிவனே விடையேறும் மேலோனாதல் பற்றிச் “சேவின்மேல் ஓங்கும் செழுமணிக் குன்றே” என்றும் சிறப்பிக்கின்றார்.

     இதனால், ஏனைத் தெய்வங்கள் போலச் சிறியோர் பிழையை மனம் கொண்டு வெறுப்புற்றுக் கைவிடலாகாது என விண்ணப்பித்தவாறு.

     (1)