696. வாடனக் குறழும் வடுக்கணார்க் குருகும்
வஞ்சனேன் பிழைதனைக் குறித்தே
வேடன்என் றையோ கைவிடில் சிவனே
வேறுநான் யாதுசெய் வேனே
நீடையில் படைசேர் கரத்தனை அளித்த
நிருத்தனே நித்தனே நிமலா
ஏடகத் தமர்ந்த ஈசனே தில்லை
எந்தையே ஒற்றியூர் இறையே.
உரை: நீண்ட வேற்படையை யேந்தும் கையையுடைய முருகப் பெருமானை ஈன்றளித்த நிருத்தனே, நித்தனே, நிமலனே, திருவேடகம் என்ற திருப்பதியில் எழுந்தருளும் ஈசனே, தில்லையில் கோயில்கொள்ளும் எந்தையே, திருவொற்றியூர்க்கண் உறையும் இறைவனே, வாட்படையினும் மேம்படும் மாவடுப் போன்ற கண்களையுடைய மகளிர்பால் உண்டாய காமவேட்கையால் மனம் உருகும் வஞ்சனாகிய என் பிழைகளை மனத்திற் குறிக்கொண்டு, வேடனென்று இகழ்ந்து நீ கைவிட்டொழிவா யானால், சிவனே, யான் வேறே யாது செய்வேன்? எ.று.
நீண்ட கைப்பிடி கொண்ட கூரிய வேற்படை என்றற்கு “நீடயிற் படை என்றும், எப்போதும் அதனைக் கையில் ஏந்துவது பற்றி முருகனை, “அயிற்படைசேர் கரத்தன்” என்றும் கூறுகின்றார். நிருத்தன் - கூத்தாடுபவன்; நிருத்தம், கூத்தை யுணர்த்தும் வடசொல். என்றும் இருப்பவன் என்ற பொருளில் சிவன் “நித்தன்” எனப் படுகின்றான். மலத்தொடக்கில்லாதவனை “நிமலன்” என்கின்றார். ஏடகம் - மதுரைக்கு அண்மையில் வையைக் கரையில் உள்ள சிவனுறையும் திருப்பதி. இதனை வள்ளற் பெருமான், “வானவர்கோன் தேமே டகத்தனொடு சீதரனும் வாழ்த்தும் சீராமேடகத் தறிவானந்தமே” (விண். கதி) என்று பாடுகின்றார். “பெரியவன் பெண்ணினோ டாணலியாகிய எரியவன் உறைவிடம் ஏடகக் கோயிலே” என்று ஞானசம்பந்தர் ஏத்துகின்றார். ஈசன் - அருட்செல்வன். பாட்டின் ஓரடியில் சிவனுறையும் பதிகள் பலவற்றைக் கூறுவது “எங்கும் உள்ளவன் ஈசன் ஒருவனே” என்ற கருத்தை வற்புறுத்துவதாகும். “உளங்கொள்வார் உச்சியார் கச்சியே கம்பன், ஒற்றியூர் உறையும் அண்ணாமலை யண்ணல்” (இலம்பை) என்று ஞானசம்பந்தர் பாடுவது காண்க. கூரிய பார்வை யுடைமை பற்றி மகளிர் கண்ணுக்கு வாட்படையை ஒப்புக் கூறுவர்; ஒப்பின்கண் ஒத்தலும் உறழ்தலும் உண்மையின் “வாள்தனக்கு உறழும் கண்ணார்” எனவும், மாவடு வடிவிற்குவமமாதலின் மாவடு போன்ற கண்ணுடைய மகளிரை “வடுக்கணார்” எனவும் இயம்புகின்றார். மகளிர்மேல் உண்டாகும் காம வேட்கை மிக்க வழி அறிவை வீழ்த்து மனத்தை யுருக்குமாதலால் “வாள் தனக்குறழும் வடுக்கணார்க்கு உருகும் வஞ்சனேன்” என்று தம்மை இகழ்ந்துரைக்கின்றார். அகத்திலுள்ள காமவிச்சையைப் புறத்தே தோன்றாவாறு மறைத்தொழுகுதலின், “வஞ்சனேன்” என்று உரைக்கின்றார். மனத்தெழும் இச்சைக்கிடம் தந்து நெஞ்சுருகுதலும் அறிவு அறை போகும் பிழையாதலின், “வஞ்சனேன் பிழைதனைக் குறித்து” எனவும், சிறுமை நோக்கிப் பொறுத்தலின்றி வெறுப்புறுதல் கூடாது என்று முறையிடுவாராய், “வேடன் என்று கைவிடின்” எனவும், கைவிட்டால் வரும் துன்பத்துக்கு அஞ்சி “ஐயோ” எனவும், செய்வகை யாதும் புலப்படாமையால் வருந்தி, “வேறுநான் யாது செய்வேன்” எனவும் எடுத்துரைக்கின்றார். வேடன், பிறவுயிர்களைக் கொலை வேட்டுத் திரியும் கீழ்மகன்.
இதன்கண், மகளிர்பால் பெறலாகும் காம நுகர்ச்சியின் பொருட்டு மனம் உருகும் குற்றத்தைக் குறித்தோதித் தம்மைக் கைவிடலாகாதென விண்ணப்பித்தவாறு. (4)
|